பெங்களூரு

பெங்களூரு நகரில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு நாளை முதல் அபராதத் தொகை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

பெங்களூரு நகரில் போக்குவரத்து அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் பல நேரங்களில் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு தாமதமாகவே செல்கின்றனர். அத்துடன் பலரும் போக்குவரத்து விதிகளை மீறுவதால் விபத்துக்களும் அதிகரிக்கின்றன. இத்தகைய போக்குவரத்து விதி மீறல் குற்றங்களுக்கு குறைவான அளவு அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டு வந்தது.

அபராதம் குறைவாக உள்ளதால் பலரும் இது குறித்து கவலைப்படவில்லை. ஆகையால் போக்குவரத்து விதி மீறல் குற்றங்கள்  நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதை குறைக்க போக்குவரத்து காவல்துறையினர் பெரிதும் முயன்றும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து துறையினர் போக்குவரத்து விதிகளில் மாறுதல்கள் செய்துள்ளனர்.

இது குறித்து ஒரு மூத்த போக்குவரத்து துறை அதிகாரி, “இந்த விதிகள் இயற்றபட்ட காலங்களில் அதிகபட்சமாக இருந்த அபராத தொகை தற்போதைய நிலையில் மிகவும் குறைவானதாகும்.  வண்டி ஓட்டும் போது மொபைல் போன் பயன்படுத்தினால் அபராதம் என விதிகள் மாற்ற பட்ட போதிலும் மற்ற அபராதங்கள் பழைய முறையில் தொடர்ந்தன. ஆனால் இது போன்ற விதிமீறல்கள் பல விபத்துக்களுக்கு காரணமாக உள்ளதால் அபராதத் தொகையை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

முன்பு வண்டி ஒட்டும் போது மொபைல் பயன்படுத்தினால் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது முதல் முறை ரூ.1000 எனவும் அடுத்த தடவைகளுக்கு ரூ.2000 எனவும் அபராதம் வசூலிக்கப்பட  உள்ளது. இனி உடல் தகுதி சான்றிதழ் இன்றி வண்டி ஓட்டுவோருக்கு முதல் முறை ரூ.2000 மற்றும் அடுத்த முறைகளில் ரூ.5000 ஆகவும் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

காப்பீடு இன்றி செலுத்தப்படும் வண்டிகளுக்கு ரூ 500 க்கு பதில் ரூ.1000 ஆக அபராதம் உயர்த்தப்பட்டுள்ளது. பார்க்கிங் விதிகளை மீறினால் முதல் முறை ரூ. 1000 மற்றும் அடுத்த முறைகளில் ரூ.2000 அபராதம் விதிக்கப்பட உள்ளது. அது மட்டுமின்றி எடுத்துச் செல்லப்படும் வாகனங்களுக்கு அபராதத்துடன் வண்டியை எடுத்துச் சென்ற போக்குவரத்து செலவுக்காக ரூ. 2000 கூடுதல் தொகை வசூலிக்கப்பட உள்ளது.