அபுதாபி: ஐபிஎல் 2020 பிளே ஆஃப் நாக் அவுட் போட்டியில், ஐதராபாத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலமாக, தொடரிலிருந்து வெளியேறியது பெங்களூரு அணி.

வரும் 8ம் தேதி ஞாயிறன்று நடைபெறும் போட்டியில், டெல்லியை எதிர்கொள்ளும் ஐதராபாத் அணி, அதில் வென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறலாம்.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்நிலையில், எளிய இலக்க‍ை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியின் துவக்கம் சரியாக அமையவில்லை. ஆனாலும், இலக்கு குறைவு என்பதால், அந்த அணி நெருக்கடி இல்லாமல் ஆடியது.

கேப்டன் டேவிட் வார்னர் 17 பந்துகளுக்கு 17 ரன்களே அடித்தார். மணிஷ் பாண்டே 21 பந்துகளுக்கு 24 ரன்களும், கேன் வில்லியம்சன் கடைசிவரை அவுட்டாகாமல் 44 பந்துகளில் 50 ரன்களும் அடித்தனர்.

பிரியம் கார்க் 14 பந்துகளில் 7 ரன்களே அடித்தார். ஜேசன் ஹோல்டர் 20 பந்துகளில் 24 ரன்களை அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

கடைசியில், 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்து வென்றது ஐதரபாத் அணி.

பெங்களூரு அணியின் ஆடம் ஸம்பா, 4 ஓவர்கள் வீசி, 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இன்றையப் போட்டியில் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கமே நிறைந்திருந்தது எனலாம்.