பெங்களூரு

பெங்களூரு சாந்திநகரில் நடந்த தனது பிறந்த நாள் கூட்டத்தில் குண்டு வெடித்ததில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஹாரிஸ் படுகாயம் அடைந்தார்.

மங்களூரு விமான நிலையத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு சிக்கியதால் கர்நாடக மாநிலத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.   மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் காவல்துறையினர் கடும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  நேற்று இரவு பெங்களூரு நகரில் நடந்த ஒரு குண்டு வெடிப்பு இந்த பரபரப்பை அதிகப்படுத்தி உள்ளது.

பெங்களூரு நகரில் உள்ள சாந்தி நகரில் அமைந்துள்ள வண்ணார்பேட் பஜார் தெருவில் நேற்று இரவு அந்த தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஹாரிஸ் பிறந்த நாள் விழா நடந்தது.   அதையொட்டி சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்துக் கொண்ட ஹாரிஸுக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

பட்டாசின் இடையே இருந்த ஒரு மர்மப் பொருள் விழா மேடையில் விழுந்து வெடித்துச் சிதறியது.   அனேகமாக அது வெடிகுண்டாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.  இந்த குண்டு வெடிப்பில் ஹாரிஸ் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.  அவர்கள்  அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையொட்டி பெங்களூரு நகரில் காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.   மேலும் சம்பவம் நடந்த இடத்தை பெங்களூரு மத்திய துணைக் காவல் ஆணையர் சேத்தன் சிங் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.