டாக்கா

ங்கதேச பிரதமரை கொல்ல அவரது பாதுகாப்பு அலுவலர்கள் திட்டமிட்டு அது முறியடிக்கப்பட்டதாக வந்த செய்தியை வங்க அரசு மறுத்துள்ளது.

சென்ற ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி அன்று வங்கப் பிரதமர் ஷேக் அசீனாவை கொல்ல அவரது சிறப்பு பாதுகாப்புப் படையினர் சிலர் திட்டமிட்டதாக வங்க செய்தி ஊடகங்களில் செய்தி வெளியானது.  இந்த செய்தியின் பின்னணியில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத அமைப்பான ஜமாத்துல் முஜாகிதீன் இருந்ததாகவும் அந்த செய்தியில் காணப்பட்டது.

தற்போது வங்க அரசு பிரதமர் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில் “ஊடகங்களில் வெளியான இந்த செய்தி தவறானது.  எந்த ஒரு அடிப்படையும் இல்லாமல் பொறுப்பற்ற நிலையில் வெளியிடப்பட்டுள்ளது.  ஊடகங்கள் பொறுப்புடன் செயல் படவேண்டும்.  அதை விடுத்து இது போன்ற தவறான செய்திகளை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்புக்கே எதிராகும்” என குறிப்பிடப் பட்டுள்ளது.