டாக்கா:

வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகளைத் திரும்பப் பெறுவது குறித்து மியான்மர் மற்றும் வங்கதேச நாடுகள் இடையே  ஒப்பந்தம் கையெழுத்தானது.

மியான்மரின் ரெகைன் மாகாணத்தில் ராணுவம் மற்றும் உள்ளூர் குழுக்களின் வன்முறைக்கு பயந்து வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ள லட்சக்கணக்கான ரோஹிங்கயா இஸ்லாமியர்களை தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப அழைத்துச் செல்லப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ரோஹிங்கயா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கும்படி மியான்மர் அரசுக்கு சர்வதேச நாடுகள் நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதுவரை 6.2 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கயா அகதிகள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

மியான்மரில் ரோஹிங்கயாகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைச் சம்பவங்கள் இன அழிப்பே என்று அமெரிக்கா அறிவித்தது. இதன் காரணமாக மியான்மருக்கு எதிரான மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலைமை டிரம்ப் அரசுக்கு ஏற்பட்டது. இந்தச் சூழலில் மியான்மர் அதிபரின் தலைமை ஆலோசகரும், வெளியுறவுத் துறை அமைச்சருமான ஆங் சான் சூகியை வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் ஏ.ஹெச். மஹ்மூத் அலி யாங்கூனில் «ந்றறு சந்தித்துப் பேசினார்.

இதைத்தொடர்ந்து, இரு தரப்பினர் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தத் தகவலை மியான்மர் தொழிலாளர், குடியேற்றம் மற்றும் மக்கள்தொகைத் துறை அமைச்சர் மியின்ட் கியாயிங் தெரிவித்தார். மியான்மர் அரசின் செய்தித் தொடர்பாளர் தனது டுவிட்டரில், ‘‘அகதிகளைத் திரும்பப் பெறுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.