புதுடெல்லி: வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடைவிதித்துவிட்டதால், வெங்காயம் இல்லாமல் சமைத்து உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கவலை தெரிவித்துள்ளார் வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா.

இந்தியாவிற்கு 4 நாள் பயணமாக வந்துள்ள ஷேக் ஹசினா, பத்திரிகையாளர்களை சந்தித்தபோது இதை தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து வரும் வெங்காயத்தைப் பெரிதும் சார்ந்துள்ள நாடு வங்கதேசம். ஆனால், உள்நாட்டு பருவமழை வெங்காய அறுவடையைப் பாதித்ததால், உள்நாட்டுச் சந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் வெளிநாடுகளுக்கான வெங்காய ஏற்றுமதியை அரசு தடைசெய்தது.

இதனால் வங்கதேசம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் இந்தியா வந்துள்ள அந்நாட்டுப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தனது சமையல்காரரை வெங்காயம் இல்லாமல் சமைக்க அறிவுறுத்தியுள்ளதாக அவர் நகைச்சுவைபடக் கூறியுள்ளார்.

“மேலும், எதற்காக எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இந்திய அரசு வெங்காய ஏற்றுமதியை திடீரென நிறுத்தியது. வெங்காயத்தைப் பெறுவது எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது. எதனால் நீங்கள் ஏற்றுமதியை தடை செய்துர்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்றுள்ளார் அவர்.