டாக்கா: இந்தியாவிலிருந்து 5 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் வங்கதேசம் இன்று பெற்றுள்ளது.

சீரம் இன்ஸ்டியூட் தயாரித்த தடுப்பூசிகளை தாங்கிய விமானம், வங்கதேசத்தின் ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் சென்று சேர்ந்தது. தற்காலிகமாக இவை அனைத்தும் அங்குள்ள தனியார் மருந்து நிறுவனத்தின் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தடுப்பூசி மருந்துகளை அரசு அதிகாரிகள் சோதிப்பார்கள். தடுப்பூசியின் செயல்திறன், அதன் வெப்பநிலை, காலாவாதியாகும் தேதி ஆகிய ஆய்வு செய்யப்படும். பின்னர் அவை அனைத்தும் முதல்கட்டமாக அந்தந்த பகுதிகளுக்கு திட்டமிட்டப்படி பிரித்து கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அடுத்துவரக்கூடிய மாதங்களில் இந்தியாவில் இருந்து ஒவ்வொரு மாதமும் 50 லட்சம் தடுப்பூசிகள் வங்கதேசத்துக்கு கிடைக்கும் என்று சுகாதார அமைச்சர் ஜாஹித் மாலேக் முன்னதாக கூறி இருந்தார். பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து நாடு தழுவிய அளவில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தை வங்கதேசம் தொடங்கும்.