இந்தூர்: இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் எடுத்தது வெறும் 150 ரன்கள் மட்டுமே.

இந்திய – வங்கதேச அணிகள் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, இந்தூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அந்த அணி கேப்டனின் முடிவு மிகவும் தவறோ என்று நினைக்கும் வகையில் நிலைமை அமைந்துவிட்டது. அந்த அணியில், முஷ்பிகுர் ரகீம் 43 ரன்களும், மோமினுள் ஹேக் 37 ரன்களும் எடுத்தனர்.

இவைதான் அதிகபட்ச ரன்கள். இதனையடுத்து லிட்டன் தாஸ் 21 ரன்களும், மிதுன் 13 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

வங்கதேசம் மொத்தம் 58.3 ஓவர்கள் ஆடியது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், ரோகித் ஷர்மா 6 ரன்கள் மட்டுமே எடுத்து, இந்த இன்னிங்சில் தனது பங்கு அவ்வளவுதான் என்று நடையைக் கட்டிவிட்டார். தற்போது அகர்வால் 37 ரன்களுடனும், புஜாரா 43 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.