டாக்கா: ஜிம்பாப்வே அணிக்கெதிரான 3வது ஒருநாள் போட்டியை 123 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதோடு, ஒருநாள் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது வங்கதேச அணி.

ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் வங்கதேசம் வென்று, ஏற்கனவே தொடரைக் கைப்பற்றிவிட்டது.

இந்நிலையில் மூன்றாவது போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, வங்கதேசத்தை பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் துவக்க வீரர்களான தமீம் இக்பாலும் லிட்டன் தாஸும் ஆட்டத்தை முழுமையாக தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர்.

இக்பால் 109 பந்துகளில் 128 ரன்களையும்(6 சிக்ஸர்), தாஸ் 143 பந்துகளில் 176 ரன்களையும்(8 சிக்ஸர்கள்) அடித்து நொறுக்கினர். இதில் இக்பால் இறுதிவரை ஆட்டமிழக்கவே இல்லை.
மழை காரணமாக 43 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த வங்கதேசம் 322 ரன்களைக் குவித்தது.

பின்னர், அதே 43 ஓவர்களில் 342 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற அசாத்தியமான இலக்கு, ஏற்கனவே நொந்து போயிருந்த ஜிம்பாப்வேயின் தலையில் சுமத்தப்பட்டது.

ஆனால், 37.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஜிம்பாப்வே அணி. அந்த அணியின் சிக்கந்தர் ரஸா அடித்த 61 ரன்கள்தான் அதிகபட்சம்.

வங்கதேசத்தின் முகமது செய்ஃபுதீன் 4 விக்கெட்டுகளையும், தய்ஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.