பெங்களூரு

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு ஐ ஐ எம் மாணவிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் அணையா விளக்கு ஏற்றி புதுமையான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது எனவும் மதம் காரணமாக துன்புறுத்தப்பட்டவர்களுக்குக் குடியுரிமை வழங்கவே இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பிரதமர் மோடி அறிவித்தார்.   ஆயினும் இந்த சட்டத்திருத்தத்தில் இஸ்லாமியரைத தவிர மற்றவர்களுக்கு குடியுரிமை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த போராட்டத்தில் பல புதுமைகள் நிகழ்ந்து வருகின்றன.  தமிழகத்தில் தற்போது மார்கழி மாதம் என்பதால் கோலங்கள் வரைவது வழக்கமாகும்.   குடியுரிமை சட்ட எதிர்ப்பு கோஷங்களைக் கோலத்தில் வரைந்து போராட்டம் நடந்து வருகிறது.    அசாம் மாநிலம் தேஜ்பூரில் கடைகளில் உள்ள ஷோ கேஸ்களில் நோ சிஏஏ என்னும் வாசகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இவ்வகையில் பெங்களூரு ஐஐஎம் (INDIAN INSTITUTE OF MANAGEMENT) மாணவிகள் புதுமையான போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.   72 மணி நேரம் தொடர்ந்து அணையா விளக்கு ஏற்றி அவர்கள் தங்கள் போராட்டத்தை நடத்துகின்றனர்.  அந்த விளக்குக்கு அவர்கள் ஜனநாயக தீபம் என பெயரிட்டுள்ளனர்.   இந்த போராட்டத்துக்குக் கல்வி நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை எனவும் மாணவிகள் சொந்தமாக நடத்தும் போராட்டம் எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து போராட்டத்தில் கலந்துக் கொண்ட மாணவி ஒருவர், “இந்த போராட்டத்தின் மூலம் நாம் ஜனநாயகத்தை தொடர்ந்து ஒளிர செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.  அரசியலமைப்பு சட்டத்துக்கு எவ்வித ஆபத்தும் வரக்கூடாது என்பதும் நாட்டின் அடிப்படை கொள்கைகள் காக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பமாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த தீபத்தை அணையாமல் மாணவிகளும் ஆசிரியர்களும் கவனித்து வருகின்றனர்.  இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியை ஒருவர், “இந்த போராட்டத்தை ஒரே எண்ணம் கொண்ட மாணவிகளும் ஆசிரியர்களும் இணைந்து நடத்தி வருகிறோம்.  அரசு அனைத்து சிறுபான்மையினருக்கும் குடியுரிமை வழங்கப்படும் என உறுதி அளிக்கவில்லை.  இது மதச்சார்புடன் செய்யப்பட்ட சட்டத் திருத்தமாகும்.   இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்பதால் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.