பெங்களூரு: பாஜக ஆதரவு தொண்டு நிறுவன விருதை ஏற்க ஐபிஎஸ் அதிகாரி ரூபா மறுப்பு

பெங்களூரு:

கர்நாடகா மாநிலம் பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த விஐபி சலுகைகளை அம்பலப்படுத்தி பிரபலமானவர் ஐபிஎஸ் அதிகாரி ரூபா. பாஜக எம்பி ராஜீவ் சந்திரசேகரின் நிதியுதவியுடன் நடத்தும் ‘நம்ம பெங்களூரு அறக்கட்டளை’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்படும் விருதுக்கு ரூபா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் ரூபா அந்த அறக்கட்டளையின் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்‘‘விருதை ஏற்க மனசாட்சி அனுமதி கொடுக்கவில்லை. அரசுப் பணியாளர்கள் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இதனை சார்ந்த சங்கங்களிடம் இருந்து விலகி நடுநிலையுடன் செயல்பட வேண்டும். இதன் மூலம் தான் ஒரு அரசு பணியாளர் தூய்மை மற்றும் நியாயமான தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் ’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஊர்காவல் படை ஐஜி.யாக உள்ள அவர் மேலும் கூறுகையில்,‘‘ இந்த விருதுடன் அதிகளவில் நிதியும் பரிசாக வழங்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் அதனை சார்ந்த அமைப்புகளையும், சங்கங்களையும் சம தூரத்தில் வைத்து பார்க்க விரும்புகிறேன்’’ என்றார்.

ராஜீவ் சந்திரசேகர் சமீபத்தில் பாஜக சார்பில் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆர்எஸ்எஸ் ஆதரவுடன் செயல்படும் ரிபப்ளிக் டிவி.க்கு அதிகளவில் நிதியுதவி செய்திருக்கும் தகவலும் வெளியாகியுள்ளது. இவரது தொண்டு நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் அரசு அதிகாரிகளுக்கான விருதில் இந்த ஆண்டு ரூபா உள்பட 7 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.