ரூ.1.21 கோடி வங்கி மோசடி செய்த பெண் துப்புரவு தொழிலாளி

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ஒரு வங்கியில் போலி கையெழுத்திட்டு அதே வங்கியின் பெண் துப்புரவு தொழிலாளி ரூ.1.21 கோடி மோசடி செய்துள்ளார்.

கோயம்புத்தூரில் பெரியநாயக்கன் பாளையத்தில் கனரா வங்கியின் கிளை ஒன்று உள்ளது.   இந்த வங்கியில் கடந்த 2014 ஆம் வருடம் வைப்பு நிதி வைத்திருந்தவர்களின் கணக்கில் இருந்து அவர்களுக்கே தெரியாமல் பணம் எடுக்கப்பட்டிருந்தது.   இது குறித்து கோவை மாவட்ட குற்றப் பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

சமீபத்தில் இந்த வழக்கு சம்பந்தமாக மங்கல தீபா (வயது 38) என்னும் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.    இவர் அந்த கால கட்டத்தில் வங்கியில் தற்காலிக துப்புரவு தொழிலாளியாக பணி புரிந்து வந்தார்.   இவர் வங்கி ஊழியர்கள் சிலர் உதவியுடன் வைப்பு நிதி கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்த தொகையை போலி கையெழுத்திட்டு கொள்ளை அடித்துள்ளார்.

கொள்ளை அடித்த பணத்தை மங்கல தீபா தனது கணவரின் கணக்குக்கு மாற்றி உள்ளார்.    அந்த பணத்தை கொண்டு காரமடை அருகே நிலம் வாங்கி அதில் வீடு கட்டி உள்ளார்.  அத்துடன் தனது கணவருக்கு சிமிண்ட் கடை வைத்துக் கொடுத்துள்ளார்.   காவல்துறையினர் அவரிடம் இருந்த வீடு மற்றும் நிலப் பத்திரங்கள் ஆகியவற்றை கைப்பற்றி அவரையும் அவர் கணவரையும் கைது செய்துள்ளனர்.

You may have missed