சிட்னி:

தனது வங்கி கணக்கில் ரூ.125 கோடி இருந்ததை கண்டு ஆஸ்திரேலியா பெண் அதிர்ச்சியடைந்தார்.

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரை சேர்ந்த கிளேர் வெயின்ரைட் என் பெண் வக்கீல் தனது இந்த அதிர் ச்சி அனுபவத்தை சமூக வலை தளத்தில் பகிர்ந்தவுடன் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.

அங்குள்ள நேஷனல் ஆஸ்திரேலியா வங்கியில் இவர் வீட்டு கடன் வாங்கியிருந்தார். மாத தவணையாக ரூ.1.25 லட்சத்தை நேரடியாக வங்கி கணக்கில் இருந்து செலுத்தி வந்தார். செயின்ட் ஜார்ஜ் வங்கியில் உள்ள தனது கணக்கை இந்த கடன் தவணைக்கு இணைத்திருந்தார்.

இந்நிலையில் எதிர்பாராதவிதமாக இவரது ஜார்ஜ் வங்கி கணக்கில் ரூ. 125 கோடியை நேஷனல் ஆஸ்திரேலியன் வங்கி செலுத்தியிருந்தது. தனது கணக்கில் ரூ.125 கோடி இருப்பு இருப்பதை கண்டு கிளேர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து இரு வங்கிகளுக்கும் அவர் தகவல் அளித்தார். தவறுதலாக பணம் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜார்ஜ் வங்கி நிர்வாகம் அந்த பணத்தை நேஷனல் வங்கிக்கு மாற்றி அனுப்பியது. இதற்காக வங்கி நிர்வாகம் கிளேருக்கு நன்றி தெரிவித்தது.

இந்த பணத்தில் இருந்து கிளேர் சிறிய அளவில் எடுத்து செலவு செய்திருந்தாலும் அது குற்றமாகியிருக்கும். ஆஸ்திரேலியா நிதி சட்டப்படி ஆன்லைனில் தவறுதலாக வரும் பணத்தை எடுப்பது திருட்டுக்கு சமமாக கருதப்படுகிறது. இவர் வக்கீல் என்பதால் அதை உணர்ந்து முன்னெச்சரிக்கையாக வங்கி நிர்வாகத்திடம் தகவல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.