பத்திரிகையாளருக்கு மிரட்டல் : வங்கி ஊழியர் வேலை நீக்கம்

டில்லி

த்திரிகையாளருக்கு சமூக வலைத் தளத்தில் மிரட்டல் செய்தி அனுப்பிய டில்லி வங்கி ஊழியரை அமெரிக்கன் வங்கி வேலை நீக்கம் செய்துள்ளது.

எழுத்தாளரும் பத்திரிகையாளருமான தேவனிக் சகா என்பவர் இந்தியாஸ்பெண்ட் என்னும் வலை தளத்தில் ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டிருந்தார்.   முன்னேறி வரும் சமுதாயம் குறித்த அந்தக் கட்டுரையில் அவர், “உயர்சாதி இந்துக்களுக்கு காவல் துறையிடம் பயம் அதிகம் இல்லை.   அவர்களிடம் காவல்துறை மென்மையாக நடந்துக் கொள்கிறது.

பஞ்சாபில் வசிக்கும் சீக்கியர்களும் தென் இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களும் காவல்துறையிடம் மிகவும் பயம் கொண்டுள்ளனர்.    இந்தியாவில் காவல்துறை போட்டுள்ள வழக்குகளில் 55% இஸ்லாமியர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீது போடப்பட்டுள்ளன.” என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு டில்லியை சேர்ந்த ஒரு வங்கி ஊழியர் கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் பதிந்துள்ளார்.  அவர் தாம் டில்லியில் உள்ள அமெரிக்க வங்கியில் துணை மேலாளராக பணி புரிவதாக முகநூலில் விவரம் அளித்துள்ளார்.    அந்த பதிவில் தேவனிக் சகாவின் கருத்துக்களுக்காக அவரை கடுமையாக விமர்சித்திருந்தார்.  அத்துடன் மிரட்டலும் விடுத்திருந்தார்.

அவரது பதிவுகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்த பத்திரிகையாளர் தேவனிக் சகா டிவிட்டர் மூலம் அமெரிக்க வங்கிக்கு அனுப்பி வைத்தார்.  அத்துடன், “தங்கள் ஊழியர் எனது கட்டுரைக்காக என்னை திட்டியும் மிரட்டியும் பதிந்துள்ளார்.  தங்கள் ஊழியர் அலுவலகத்துக்கு வெளியே இவ்வாறு நடக்கலாமா?  நான் ஒரு பத்திரிகையாளனன்.   எனது வேலையை நான் செய்கிறேன்” என பதிந்திருந்தார்.

இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க வங்கி பத்திரிகையாளரின் பதிவில் பதில் அளித்தது.  அது குறித்து மேலும் சில விவரங்களை வங்கி கேட்டு அறிந்தது.    சுமார் ஒன்பது நாட்களுக்குப் பிறகு, “நாங்கள் இது குறித்து உள்துறை விசாரணை ஒன்றை நடத்தினோம்.   அதில் எங்கள் ஊழியர் தவறு செய்ததை அறிந்துக் கொண்டோம்.   அதனால் அவரை வேலையை விட்டு விலகுமாறு அறிவுறுத்தினோம்.   அவர் விலகி விட்டார்.” என அமெரிக்க வங்கி தெரிவித்துள்ளது.

அந்த வங்கி ஊழியரின் முகநூல் பக்கத்தில் அவர் தாம் வங்கியில் பணி புரிவதாக குறிப்பிட்டிருந்த்தை நீக்கி உள்ளார்.