முத்ரா கடன் அளிக்காத வங்கி அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு ரத்து : அமைச்சர் அதிரடி

டில்லி

முத்ரா கடன் திட்டத்தின் கீழ் முழுமையாக கடன் வழங்காத வங்கி அதிகாரிகளின் ஊதிய உயர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட கடன் வழங்கும் திட்டம் முத்ரா கடன் திட்டம் ஆகும்.  நடுத்தர, சிறு மற்றும் குறும் தொழில் முனைவோர் இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.  இதற்காக ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.   இந்த திட்டத்தின் கீழ் வங்கிகள் கடந்த ஆறாம் தேதி வரை 48000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கி உள்ளது.

இந்த முத்ரா கடனை ஒரு சில வங்கிக் கிளைகள் இலக்கை தாண்டி அதிகமாகவே வழங்கி உள்ளன.  ஒரு சில வங்கிக் கிளைகள் இலக்கை எட்டாமல் உள்ளன.    மத்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அகிர் இந்த விவகாரங்களை கவனித்து வருகிறார்.   இவர் இது குறித்து மகாராஷ்டிர மாநிலம் சந்திராப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.   சந்திராப்பூர் அமைச்சரின் தொகுதி ஆகும்.

அந்த கடிதத்தில், “மத்திய அரசு திட்டங்களான முத்ரா கடன் உள்ளிட்டவைகளை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.   அதிலும் முத்ரா திட்டத்தின் கீழ் கடன்களை நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு வழங்காமலும் ஒத்துழைப்பு அளிக்காமலும் வங்கி அதிகாரிகள் உள்ளனர்.

இவர்களின் ஆண்டு சம்பள உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.   இதற்கான உத்தரவை  உடனடியாக் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் அனுப்பி வைக்க வேண்டும்.  முக்கியமாக சந்திராப்பூர் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி முத்ரா திட்டத்தின் கீழ் பயிர்க்கடன்களை வழங்காமல் உள்ளது” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஆட்சியர் அசுதோஷ் சலீல், “திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.   ஆனால் திட்டத்தை சரிவர செயல்படுத்தாத எந்த ஒரு வங்கி அதிகாரிகளின் சம்பள உயர்வையும் ரத்து செய்ய நாங்கள் உத்தரவிடவில்லை.    மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த தவறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.