துரை

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உண்மையான அ தி மு க எது எனத் தெரிந்தால் தான் தேவரின் தங்கக் கவசத்தை அவர்களிடம் தர முடியும் என பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் பசும்பொன் பகுதியில் முன்பு புகழ் பெற்ற தலைவராக விளங்கியவர் முத்துராமலிங்கத் தேவர்.   அவர் தேவர்களுக்கு மட்டுமின்றி பல மக்களுக்கும் உதவிகள் புரிந்து வந்தார்.    வருடா வருடம் அவருடைய நினைவிடத்தில் குருபூஜை சமயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம்.   அ தி மு க சார்பில் பல முறை குருபூஜையில் தலைவர்கள் பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.

இங்குள்ள தேவர் சிலைக்கு கடந்த 2014ஆம் வருடம்  ஜெயலலிதா அதிமுக சார்பில் ஒரு தங்கக் கவசத்தை வழங்கினார்.   சுமார் 13 கிலோ எடையுள்ள இந்தக் கவசம் சுமார் ரூ.4.5 கோடி ரூபாய் மதிப்புள்ளதாகும்.  ஒவ்வொரு வருடமும் குருபூஜை முடிந்ததும் இந்த கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியாவின் பெட்டகத்தில் வைக்கப்படுவது வழக்கம்.   இந்த பெட்டகம் அ தி மு க பொருளாளர் என்னும் வகையில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் பசும்பொன் தேவர் நினைவிடத்தின் தாளாளர் ஆகியோர் பெயரில் உள்ளது.

தற்போது அ தி மு க மூன்று அணிகளாகப் பிரிந்து பின் இரு அணிகளாக ஆகி உள்ளது.  இரு அணிகளில் எது உண்மையான அ தி மு க என தெரிந்தால் தான் அந்த அணியின் பொருளாளரிடம் தேவரின் தங்கக் கவசம் வழங்க முடியும் என வங்கி தெரிவித்துள்ளது.   இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும் அது வரை தங்கக் கவசம் எந்த அணியிடமும் கொடுக்கப்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளது.   ஆளும் கட்சி அணியை சேர்ந்த ஒரு பிரமுகர் தங்களின் அணிதான் உண்மையான அ தி மு க என்பதற்கான ஆவணத்தை விரைவில் சமர்ப்பித்து குருபூஜை ஆரம்பிப்பதற்குள் தங்கக் கவசம் வங்கிப் பெட்டகத்தில் இருந்து எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.