புதுடெல்லி: தேர்தலில் நிற்கும் வேட்பாளர்களிடம், அவர்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று வருமாறு தேர்தல் கமிஷன் கோர வேண்டுமென, புதுடெல்லி பிரதேச வங்கிப் பணியாளர்கள் சங்கம், தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுதொடர்பான ஒரு மின்னஞ்சல், அச்சங்கம் சார்பாக தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; நாட்டில் தற்போது வங்கிகளின் வராக்கடன் பிரச்சினை பெரியளவில் உருவெடுத்துள்ளது. எனவே, அரசியல்வாதிகள் தரப்பில் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபடுவதைத் தடுக்க, வேட்புமனு தாக்கல் செய்யும் அவர்களிடமிருந்து, தேர்தல் கமிஷன், கணக்கு வைத்திருக்கும் வங்கிகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற்றுவருமாறு கேட்க வேண்டும்.

இந்த தடையில்லா சான்றிதழில், அவர்களோ அல்லது அவர்களுடைய குடும்பத்தினர்களோ, எத்தகைய கடன் நிலுவையும் வைக்கவில்லை என்பது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இதன்மூலம், அவர்கள் வங்கிக் கடன் மோசடியில் ஈடுபடுவதை தடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி