டில்லி

தேர்தல் காரணமாக பதுக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் குறைந்து இருக்கலாம் என வங்கி அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் வருடம் நவம்பர் 8 ஆம் தேதி அன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவித்ததால் அதிக மதிப்புள்ள ரூ.500 மற்றும் ரூ.1000  நோட்டுக்கள் செல்லாமல் போனது.   அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.    கடந்த சில நாட்களாக ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் காணப்படுவதில்லை.

முதலில் ஏடிஎம் களில் ரூ.2000 நோட்டுக்கள் அதிகம் கிடைத்து வந்தன.   தற்போது ரூ.2000 நோட்டுக்கள் நிரப்பப் படுவதில்லை.    யாரேனும் ரூ.2000 ஏடிஎம் களில் இருந்து எடுக்கும் போது முன்பெல்லாம் ஒரே ரூ.2000 ஆக கிடைத்து வந்தது.  தற்போது ரூ.500 அல்லது ரூ.100 நோட்டுக்களாக கிடைக்கின்றன.   ஆனால் ரூ.2000 நோட்டுக்கள் தட்டுப்பாடு இல்லை என ரிசர்வ் வங்கி கூறுகிறது.

இது குறித்து வங்கி அதிகாரி ஒருவர், “தேவையான அளவு ரூ.2000 நோட்டுக்கள் இந்த வருடம் பிப்ரவரி மாதமே அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன.   ஆனால் அந்த நோட்டுக்கள் மீண்டும் வங்கிகளுக்கு வரவில்லை.    மக்களவை தேர்தலை முன்னிட்டு அந்த நோட்டுக்கள் பதுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஒரு மூத்த அரசு அதிகாரி, “தேர்தலை முன்னிட்டு மீண்டும் கருப்புப் பணம் உருவாகி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.  அதனால் அதிக மதிப்புள்ள நோட்டுக்கள் பதுக்க்ப் பட்டு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.  வருமான வரி அதிகாரிகள் இதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ” என தெரிவித்துள்ளர்.

மற்றொரு வங்கி அதிகாரி, “ஏடிஎம் களில் நான்கு தட்டுக்கள் உள்ளன.  அவற்றில் ஒன்றில் ரூ.2000 மற்றொன்றில் ரூ.100 மற்ற இரு தட்டுக்களில் ரூ.500 நிரப்பப்படுகிறது.   தற்போது ரூ.2000 நோட்டுக்கள் இல்லாததால் அந்த தட்டு நிரப்பப் படுவதில்லை.   அதனால் அடிக்கடி ஏடிஎம் இல் நோட்டுக்கள் நிரப்ப வேண்டி உள்ளது” என தெரிவித்துள்ளார்.