அத்தியாவசியமற்ற பணிகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டாம்: சென்னை மாநகராட்சி!

சென்னை: அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக மக்கள் வங்கிகளுக்கு செல்லத் தேவையில்லை என்றும், முடிந்தவரை தொழில்நுட்ப சேவைகளைப் பயன்படுத்த வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார் சென்னை மாநாகர கமிஷனர் ஜி.பிரகாஷ்.

“பாஸ்புக் என்ட்ரி போன்ற அத்தியாவசியமற்ற சாதாரண வேலைகளை தவிர்க்குமாறு வங்கிகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம். சிறிய அளவிலான பணமெடுப்பு பணிகளுக்கு ஏடிஎம் சேவைகளைப் பயன்படுத்த வேண்டும். மிகவும் முக்கியமென்றால் ஒழிய, யாரும் வங்கிகளுக்கு செல்ல வேண்டாம்” என்றுள்ளார் அவர்.

சென்னை மாநகரில், கிட்டத்தட்ட 1500க்கும் மேற்பட்ட வங்கிகள் செயல்பட்டு வருவதாக கணக்கிடப்படுகிறது. எந்த வணிக நிறுவனமோ அல்லது கடைகளோ, சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட விஷயங்களைப் பின்பற்றாதிருந்தால், அவை மூடப்பட்டு, சீல் வைக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“கடைகளை மூடுவது எங்களின் நோக்கமல்ல. அதேசமயம், நன்மைக்காகத்தான் இந்த நடவடிக்கை. மொத்தம் 32 சந்தை மேலாண்மை கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் மாநகரின் 81 மார்க்கெட் பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன” என்று மேலும் கூறினார் கமிஷனர்.