மினிமம் பாலன்ஸ் இல்லாதவர்களிடம் வங்கிகள் ரூ.11.5 ஆயிரம் கோடி அபராதம்
டில்லி
கடந்த 4 வருடங்களில் கணக்கில் குறைந்த பட்ச தொகை வைத்திருக்காதவர்களிடம் இருந்து வங்கிகள் ரூ.11528 கோடி அபராதம் வசூலித்துள்ளது.
வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்ச தொகையாக ஒரு குறிப்பிட்ட தொகையை கணக்கில் வைத்திருப்பது அவசியமாகும். அவ்வாறு வைத்திராத வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கலாம் என சட்டம் உள்ளது. கடந்த 2015ஆம் வருடம் ஜூலை மாதம் 1 ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பின்படி வங்கிகள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப இந்த அபராத தொகையை நிர்ணயம் செய்துக் கொள்ளலாம் என உரிமை அளித்தது.
இந்த அபராதத் தொகை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அரசு பதில் அளித்தது. அந்த பதிலில் “நாட்டில் உள்ள 3 தனியார் மற்றும் 21 பொதுத்துறை வங்கிகளில் உள்ள கணக்குகளில் குறைந்த பட்ச தொகை வைக்காதவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் 2017-18 ல் முந்தைய ஆண்டை விட இருமடங்காகி உள்ளது. அதற்கு பாரத ஸ்டேட் வங்கி தனது கணக்கில் வைக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையை அதிகரித்ததே காரணம் ஆகும்.
இவ்வாறு வங்கிகள் 2014-15 ஆம்வருடம் ரூ.2084 கோடி, 2015-16 வருடம் 2138 கோடி மற்றும் 2016-17ஆம் வருடம் ரூ.2318 கோடி அபராதம் வசூலித்தது. அது 2017-18ல் ரூ.4980 ஆக அதிகரித்தது. இவ்வாறு 2014 முதல் 2018 வரையிலான 4 வருடங்களில் அபராதமாக ரூ.11,528 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.