புதுடெல்லி: ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கையில், ஒருவேளை வாடிக்கையாளர் கணக்கிலிருந்து குறைந்தபட்ச தொகை குறைந்தால், அதன்பொருட்டு வங்கிகள் அபராதம் வசூலிக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கியை ‘அகில இந்திய வங்கி வைப்புத் தொகையாளர்கள் சங்கம்’ கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து, அந்த சங்கம் கூறியுள்ளதாவது; ஒருவர் வங்கியில் தன்னுடைய கணக்கில் போதுமான பணம் இல்லாத நிலையில், ஏடிஎம் மையத்திலிருந்து பணம் எடுக்க முயற்சித்தாலோ அல்லது வேறு ஏதாவது பணப் பரிவர்த்தனை செய்ய முயன்றாலோ, அதை, பணம் இன்றி காசோலை வழங்கியதற்கு ஒப்பாக கருதி, ரூ.25 மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால், ஏடிஎம் மையத்தில் ஒருவர் அவருடைய பணத்தை எடுப்பது என்பது, மூன்றாம் நபருக்கு காசோலை வழங்குவதற்கு ஒப்பானதல்ல. அவர் வங்கிக்கு சென்று தன்னுடைய பணத்தை எடுப்பதற்கு சமமானது. அபராதம் விதிப்பது அநீதியானது.

இதுபோன்ற செயலால், பலர் டிஜிட்டல் பரிவர்த்தனையிலிருந்து விலகி, ரொக்கப் பரிவர்த்தனைக்கு திரும்புகிறார்கள். போதுமான பணத்தை பராமரிக்க இயலாத பாமரர்கள்தான், இந்த நடைமுறையால் கூடுதலாக பாதிப்புக்கு ஆளாக்கப்படுகிறார்கள். எனவே, இத்தகைய அபராதக் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.