டெல்லி: வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி வசூல் செய்வதை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறி உள்ளது.

கொரோனா ஊரடங்கின் போது, வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான தவணைகளை செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆகஸ்டு 31ம்  தேதி வரை கால அவகாசம் தரப்பட்டு இருந்தது.

தவணைக் காலம் அதிகரிப்பதால் கடன் மற்றும் வட்டியின் சுமை அதிகரிக்கும் என்பதால் அதை பல்வேறு தரப்பினரும் எதிர்த்தனர்.  குறைந்த பட்சம் வட்டியையாவது ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந் நிலையில் உச்சநீதிமன்றத்தில் தவணையின் மீதான வட்டி மீது கூடுதல் வட்டி வசூலிப்பதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

அப்போது வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக றி கூறி உள்ளது. பொருளாதாரத்தை வலுவிழக்கும் வகையில் முடிவெடுக்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கூறியதாவது: அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டாலும் அதன் பாதிப்புகள் வேறாக உள்ளது. எனவே ஆகஸ்டு 31ம் தேதி வரை மாத தவணை  கட்டாதவர்கள் கணக்குகள் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படாது என்று கூறியது.

இதனையடுத்து, ஆகஸ்டு 31 வரை தவணை கட்டாதவர்களின் கணக்குகளை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும், மறு உத்தரவு வரும் வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்றும் நீதிமன்றம் கூறி உள்ளது.