டில்லி

வோடபோன், எர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கடன் தொகை அதிகரிப்பால் வங்கிகள் நிதி அளிக்க மறுத்துள்ளன.

கடந்த சில மாதங்களாகத் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வருகின்றன.    நேற்று வெளியான அறிக்கையில் ஏர்டெல் நிறுவனம் கடந்த செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் ரூ.23,045 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.   இதே காலகட்டத்தில் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.50,922 கோடி நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில்  வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு நீண்ட கால கடனாக ரூ.104,402 கோடியும் குறுகிய கால கடனாக ரூ.4120 கோடியும் வங்கிகளுக்குத் தர வேண்டியுள்ளது.   ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்தும் வங்கிகளுக்கு வாராக்கடன் நிறைய உள்ளது.   எனவே வங்கிகள் இந்த இரு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மேலும் நிதி வழங்க மறுத்துள்ளது.

தற்போதுள்ள நிலுவைத தொகையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்தாத நிலையில் ஏற்கனவே உள்ள கடன் தொகையை வசூலிப்பதில் வங்கிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.   இந்த நிறுவனங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்தும் வரை மேற்கொண்டு வங்கிகளிடம் இருந்து எந்த உதவியையும் பெற முடியாத நிலை உள்ளது.

இது குறித்து வங்கி உயர் அதிகாரி ஒருவர், “தற்போது தொலைதொட்ர்பு நிறுவனங்களின் நிதி நிலை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.  இந்த நிறுவனங்கள் திவாலாக நேர்ந்தால் வங்கித் துறைக்கு அது ஒரு பேரிடியாக அமையும்.   வங்கிகள் இந்த நிறுவனங்களுக்கு நிறைய நிதி அளித்துள்ளன.  எனவே அரசு இதில் தலையிட்டு உதவ வேண்டும்.   தற்போதுள்ள நிலையில் அரசு உதவி கிடைக்காவிட்டால் இந்த நிறுவனங்களின் நிலை கேள்விக்குறி ஆகி விடும்.   அத்துடன்

கடன் சுமையுடன் தற்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி தொலை தொட்ர்பு நிறுவனங்கள் உரிமக் கட்டண நிலுவையை அபராதம் மற்றும் வட்டியுடன் செலுத்த வேண்டி உள்ளது.    இதைச் செலுத்தி விட்டால் நிறுவனங்களால் வங்கிக் கடனை செலுத்த முடியாது.   ஆகவே இதை ரத்து செய்ய அரசு முன் வ்ர வேண்டும்.    வங்கிகளுக்குப் பணம் கிடைக்காவிடில் அது பொருளாதாரத்தை மேலும் பாதிக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.