பிசிசிஐ தடையால் 12ஆண்டுகாலம் வீண்: பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு!

சண்டிகர்:

பிசிசிஐ தடை காரமாக கடந்த 12ஆண்டுகாலமாக  கிரிக்கெட் ஆடாமல் இருந்து வந்த இந்திய கிரிக்கெட் வீரர், தினேஷ் மோங்கியா தனது 42வது வயதில் அனைத்துவிதமான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் ஓய்வுபெறு வதாக அறிவித்து உள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேனான  தினேஷ் மோங்கியா கடந்த 1995-96-ம் ஆண்டு முதலே கிரிக்கெட்டில் பங்காற்றி வருகிறார். சிறந்த பேட்ஸ்மேன் ஆன மோங்கியா, இடதுகையால்  சுழற்பந்து வீசுவதிலும் வல்லவர்.

1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்சாபிற்காக 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான இளம் கிரிக்கெட் வீரர் போட்டியில் அறிமுகமானார், மேலும் 6 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் தர கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடியதன் பின்னணியில், மோங்கியாவுக்கு 2001 ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தேசிய அணியில் ஒருநாள் அழைப்பு விடுக்கப்பட்டது.

2003-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணி 2-ம் இடம் பிடித்தது. அப்போது இந்திய அணியில் விவிஎஸ் லட்சுமணுக்கு பதிலாக தினேஷ் மோங்கியா சேர்க்கப்பட்டு இருந்தார்.  ஆனால், அந்த போட்டியில் மோங்கியா சோபிக்கவில்லை.

இதுவரை 57 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள தினேஷ் மோங்கியா 1,230 ரன்கள் சேர்த்துள்ளார். அதிகபட்சமாக 159 ரன்கள் குவித்துள்ளார். 1 சதம், 4 அரைசதங்கள் அடித்துள்ள மோங்கியா, இதுவரை 57 போட்டிகளில்  14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இறுதியாக கடந்த 2007-ம் ஆண்டு தாகாவில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

121 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் மோங்கியா 8,028 ரன்கள் குவித்துள்ளார், சராசரியாக 48.95 ரன்களும், அதிகபட்சமாக 308 ரன்களும் சேர்த்துள்ளார்.  27 சதங்களும், 28 அரைசதங்களும் அடித்துள்ளார்.

லிஸ்ட் ஏ போட்டிகளில் 10 சதங்கள், 26 அரைசதங்கள் உள்பட 5535 ரன்களை தினேஷ் மோங்கியா குவித்துள்ளார்.

2003-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டிக்குப்பின் நியூஸிலாந்து பயணம் செய்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தினேஷ் மோங்கியா மோசமாக பேட் செய்ததால், அணியில் இருந்து 2005-ம் ஆண்டு நீக்கப்பட்டார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரேஒரு டி20 போட்டியில் மட்டும் விளையாடிய தினேஷ் மோங்கியா 38 ரன்கள் சேர்த்ந்திருந்தார்.

இதற்கிடையில் பிசிசிஐக்கு போட்டியாக நடத்தப்பட்ட இந்தியன் கிரிக்கெட் லீக் போட்டியில் கடந்த 2007ம் ஆண்டு பங்கேற்று விளையாடினார். இதனால் ஆத்திரமடைந்த பிசிசிஐ அந்த தொடரில் பங்கேற்ற பல்வேறு வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.அதில் தினேஷ் மோங்கியாமீது நடவடிக்கை எடுத்தது. நீண்டகாலத்துக்குப்பின் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக தினேஷ் மோங்கியாவுக்கு பிசிசிஐ வாய்ப்பளித்தது.

அதன்பின் கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணியில் தினேஷ் மோங்கியாவுக்கு இடம் அளிக்காமல் பிசிசிஐ புறக்கணித்து வந்த நிலையில், தற்போது அனைத்து போட்டிகளிலும் இருந்து விலகுவதாக தனது 42வது வயதில் ஓய்வை அறிவித்து உள்ளார்.