டில்லி.

டந்த  ஆண்டு நவம்பர் மாதம் 8ந்தேதி நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்றும், பொதுமக்கள் தங்களிடம் உள்ள  500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வங்கியில் ஒப்படைத்து மாற்றாக புதிய 2000 ரூபாய் வாங்கிக்கொள்ளலாம் என்றும் மத்தியஅரசு அறிவித்தது.

இதன் காரணமாக நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவியது. தற்போது நிலமை சீரடைந்துள்ள நிலையில் புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிப்பு பணி தொடங்கியுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக புதிய 2000 ரூபாய் நோட்டு செல்லாததாக அறிவிக்கப்பட்டு விடுமோ என பொதுமக்கள் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் புதிய ரூ.1000 நோட்டுகள் அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விட மத்தியஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய 1000 ரூபாய் நோட்டுகள் கடுமையான  பாதுகாப்பு அம்சங்களுடன் பார்வையற்றவர்களும் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும்,  அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, முழு வீச்சில் நடைபெற்று  வருவதாகவும்  ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த புதிய ரூபாய் நோட்டு எப்போது வெளியிடப்படும் என்ற தகவல்கள் இல்லை.

ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் 10ந்தேதி மத்திய அரசின் மத்திய பொருளாதார விவகார செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறும்போது, ஒரு சில மாதங்களில் புதிய 1000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.