சென்னை,

மிழகத்தில் பேனர்கள் வைக்கப்படுவதை  எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட  வழக்கில் தனி நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திரிலோக்‌ஷன குமாரி என்பவர், தன் வீட்டின் முன் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என கோரி கடந்த அக்டோபரில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை  ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், அந்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

மேலும்,  உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்கள் வைக்கக்கூடாது. உயிருடன் இருப்ப வர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம்பெறக்கூடாது, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக பேனர்களோ கட் அவுட்களோ வைக்கக்கூடாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கும் விவகாரத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு  நீதிபதிகள் சிவஞானம், நீதிபதி ரவிச்சந்திர பாபு அமர்வு முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது,  அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி பேனர் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும், பேனர், கட்அவுட்களை வைப்பதால் அரசுக்கு வருவாய் கிடைப்பதாகவும் கூறினார்.

இதற்கு பதில் தெரிவித்த நீதிபதிகள் பேனர், கட்அவுட் வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மறுஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது  என்றும்,  இந்த வழக்கு ஏற்கனவே தலைமை நீதிபதி அமர்வு முன்பும் விசாரணையில் உள்ளதால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறினர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் வாதத்தை தொடர்ந்து, உயிருடன் இருப்பவர்கள் புகைப்படங்கள் பேனர்களில் பயன்படுத்தக் கூடாது என்ற உத்தரவு ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.