சென்னை:

பேனர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசின்  அனுமதியின்றி பேனர் வைக்க மாட்டோம் என உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் பேனர் தொடர்பான வழக்கில் நீதிமன்ற உத்திரவுகளை பின்பற்றுவதாக திமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  எம்.பி பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் சுபஸ்ரீ கடந்த  12ம் தேதி அகால மரணம் அடைந்தார். இது தொடர்பாக பேனர் வைத்த  அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசுமீது சாட்டையை சுழற்றியது.  அதைத்தொடர்ந்து பேனர் வைப்பதை தவிர்க்க அரசியல் கட்சிகள் உறுதி அளிக்க வேண்டும் என்று கூறியது.

இந்த நிலையில், திமுக சார்பில் பேனர் விவகாரம் தொடர்பாக பிரம்மான பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  திமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி  பெயரில், வழக்கறிஞர்  ரிச்சர்ட்சன் வில்சன் சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் திரு. சத்யநாராயணா மற்றும சேஷ சாயி ஆகிய அடங்கிய அமர்வு முன்பு டிஜிட்டல் பேனர் தொடர்புடைய வழக்கில் பிரமாண வாக்கு மூலம் இன்று (16-9-2019) தாக்கல் செய்jh;u/

அதில், தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 2017ல் செயல் தலைவராக இருந்தபோது, “பிளக்ஸ்போர்டு, டிஜிட்டல் பேனர், கட்-அவுட் போன்றவற்றை உரிய அனுமதி பெறாமல், மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், தி.மு.க. நிகழ்ச்சிகளில் வைக்க வேண்டாம்” என்று கட்சியினருக்கு அறிக்கை மூலம் அறிவுறுத்தி இருந்ததையும் குறிப்பிட்டு;
அதே போன்று, 2018ல் தி.மு.க. தலைமை நிலையம் கழக நிர்வாகிகளுக்கும் – தொண்டர்களுக்கும் “டிஜிட்டல் பேனர் வைக்கக்கூடாது” என்று எச்சிரிக்கையுடன் அறிக்கை விடுத்ததையும் குறிப்பிட்டு;
இறுதியாக கடந்த 13-9-2019 அன்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “கழக நிகழ்ச்சிகளுக் காக பேனர்கள், கட்-அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்து வதோடு, இதையும் மீறி பேனர்கள் வைக்கப்பட்டால், அந்நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ள மாட்டேன்; இந்த அறிவுரையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கழக நிர்வாகிகளுக்கும் -தொண்டர்களுக்கும் எச்சரிக்கை விடுத்ததையும் குறிப்பிட்டுள்ளதோடு, நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி தி.மு.க. செயல்படுத்தும்.

இவ்வாறு அப்பிரமாண பத்திரத்தில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.