சென்னை:

பேனர் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக நடந்துகொண்டுள்ள நிலையில், சுமார் 10ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.  அதுமட்டுமின்றி பல கோடி ரூபாய் முதலீடுகளும் முடங்கி போகும் நிலை உருவாகி உள்ளது.

நாடு முழுவதும் சுவர்களில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அச்சக நிறுவனங்கள்  பிளக்ஸ் பேனர்கள் தொழிலுக்கு மாறினர். இதற்காக அரசும் நிதி உதவி செய்தது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், அனைத்து செயல்களையும் விளம்பரப்படுத்தவது அவசியம் மட்டுமின்றி அத்தியாவசியமும் ஏற்படுகிறது.   விளம்பரம் என்பது வியாபாரத்திற்கு மிகவும் அத்தியாவசியமானது.

திருமணம், காதணி விழா, கோவில் திருவிழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், கடை விளம்பரங்கள் போன்ற அனைத்து விதமான நிகழ்சிகளும் எளிய முறையில் மக்களை சென்றடைய டிஜிட்டல் பேனர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

டிஜிட்டல் பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் உதவியால் புகைப்படங்கள் தெளிவாக இருப்பதால், அனைத்து தரப்பினரும்  சுயவிளம்பரத்தைத் தேடிக்கொள்ள விரும்பும் பிளக்ஸ்களையே நம்பி வருகின்றனர். இதில் அரசியல் கட்சிகளின் மோகம்…. அசாதாரணமானது. இதன் காரணமாக  எங்கு பார்க்கினும் பிளக்ஸ் விளம்பரங்களே புற்றீசல்போல கோலோச்சுகின்றன.

இவற்றின் ஆபத்து குறித்து யாருக்கும் கவலைப்படுவது இல்லை. ஆபத்தைச் சுமந்துகொண்டுள்ள ஏராளமான  பிளக்ஸ் விளம்பரங்களை வைக்க உயர்நீதி மன்ற உத்தரவுப்படி தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், அதை எந்தவொரு அரசியல் கட்சியினரும் கண்டுகொள்வது இல்லை… அரசு அதிகாரிகளும் கவனத்தில் கொள்வது இல்லை.

முச்சந்திகளில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகனங்களை மறைக்கும் வகையில் சாரையோரங்களிலும், சாலையின் நடுவிலும் வைக்கப்படும் பிளக்ஸ் விளம்பரங்களால் ஏராளமான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகளின் கவனங்களையும் இவை சிதறச் செய்கின்றன. பல பிளக்ஸ்களால் ஆங்காங்கே சச்சரவுகளும் நிகழ்கின்றன. பிளக்ஸ் விளம்பரங்களைக் கிழிக்கும் அரசியல் கலாசாரமும் அரங்கேறி வருகிறது.

வேகமாக காற்று வீசும்போது பேனர் சரிந்து விழுந்து பாதசாரிகளும் வாகனங்களில் செல்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இந்த நிலையில்தான் சென்னையில் பிளக்ஸ் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்த விவகாரம் பூதாகாரமாக எழுந்த நிலையில், பேனர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினர் ஆவேசமாக குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில், உயர்நீதி மன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து,  அனைத்து அரசியல் கட்சசிகளும் பேனர்கள் வைப்பதில் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளன.

இந்த நிலையில்தான் தற்போது  பிளக்ஸ் பேனர்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் காவல்துறையினரும் பேனர்களை அகற்றி வருகின்றனர். பேனர் எண்ணிக்கைக்கும்,வைக்கப்படுவதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், பேனர் விபத்தால் பேனர் தயாரிக்கும் நிறுவனத்துக்கும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் குறிப்பிட்ட சில நாட்கள் முன்னதாக மட்டுமே விளம்பரம் வைக்க அனுமதி அளிக்கப்படும் என்பது முக்கியமான விதியாகும். அதேபோல, நிகழ்ச்சி முடிந்தவுடன் அவற்றை வைத்தவர்களே உடனடியாக அகற்றிவிட வேண்டும் என்றும் விதி இருக்கிறது ஆனால், அதை யாரும் கடைபிடிக்காத நிலையில், அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக இன்று பிளக்ஸ் அச்சிடும் தொழில் கடுமையான சோதனைக்கு உள்ளாகி உள்ளது.

இந்த நிறுவனங்களில் பணியாற்றி வரும் சுமா 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிசைனர்கள், பிரிண்டர்கள் போன்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.  இது மட்டு மின்றி பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ள தொழில்நிறுவனங்களும் பெரும் வருமான இழப்பை சந்தித்து வருகின்றன…

பிளக்ஸ் பேனர்கள் வைப்பதில் ஏற்படும் பிரச்சினை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவாதித்து, அதை சரிவர செயல்படுத்துவதை விட்டுவிட்டு, ஒரேடியாக பேனருக்கு தடை விதித்தால், அதை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரத்துக்கு யார் பொறுப்பு…. என்று பேனர் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குரல் எழுப்புகின்றனர்.

பிரச்சினையின் சாரம்சம் தெரியாமல் நீதிமன்றமும், அரசும் தொழில்முனைவோர்களை சிதைப்பது எந்த விசயத்திலும் நியாயமல் அல்ல… இதுபோன்ற மக்கள் நலம் சார்ந்த பிரச்சினைகளில் அவசரத்தை காட்டாமல் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்வதே உத்தமம்.

மதுரையைச் சேர்ந்த பேனர் நிறுவனர் ஒருவர் தனது உள்ளக்குமுறலை பறைசாற்றும் வீடியோ….

பிளக்ஸ் விளம்பரம் அச்சிடப்படும் துணி போன்ற பொருள், பாலிவினைல் குளோரைடு (பி.வி.சி.) எனப்படும் ரசாயனப் பொருளால் தயாரிக்கப்படுவது. இது மக்காத தன்மை கொண்டது.  இதில் அச்சிடப் பயன்படுத்தும் மையும் மிகுந்த நெடியுடைய ரசாயனத் திரவமே. இவை இரண்டுமே சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.