பேனர் விவகாரம்: தடையை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு!

சென்னை,

பேனர்கள் மற்றும் கட் அவுட்கள் வைக்க தனி நீதிபதி விதித்த தடை உத்தரவை ரத்து செய்ய முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திரிலோக்‌ஷன குமாரி என்பவர், தன் வீட்டின் முன் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என கோரி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை  ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், அந்த பேனர்களை அகற்ற உத்தரவிட்டார்.

சேலம் அருகே பைபாசில் உள்ள எடப்பாடியின் பேனர்

மேலும், உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட்கள் வைக்கக்கூடாது. உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்கள் பேனர்களில் இடம்பெறக்கூடாது, போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக பேனர்களோ கட் அவுட்களோ வைக்கக்கூடாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கும் விவகாரத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, இன்று நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பேனர்களில் புகைப்படங்கள் வைக்கக்கூடாது எனக்கூறுவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஒருவர் புகைப்படத்தை பேனரில் வைப்பதற்காக அவர் இறக்கும்வரை காத்திருக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுவதில் அரசு தரப்பு அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை. பலமுறை இதில் மெத்தனம் காட்டிவருகின்றனர். மேலும், பேனர்கள் தொடர்பான ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தனிநீதிபதி விதித்த உத்தரவிற்கு தடைவிதிக்க முடியாது  எனக் கூறி வழக்கு விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதன் காரணமாக தமிழகத்தில் பேனர் வைக்க தடை நீடித்து வருகிறது.

இந்நிலையில் சேலம் பகுதியில்  முதல்வர் எடப்பாடியின் பல பேனர்கள்  தற்போதுவரை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.