சென்னை: ஆன்லைன் பட்டாசு விற்பனை தடையால், சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கடைகளில் வியாபாரம் களைகட்டியது.

தீபாவளியின் போது, ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடை கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆன்லைனில் பட்டாசுகள் விற்க தடை விதித்தது.

ஆனால், தடை உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி, நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற ஆணையின்படி, ஆன்லைன் மூலம் பட்டாசு விற்கும் இணையதளங்களை முடக்க உத்தரவிட்டது.

அப்படி விற்றால், தண்டனை விதிக்கப்படும் என்று விளம்பரப்படுத்துமாறும்  நீதிமன்றம் கூறியது. நீதிமன்ற ஆணையினால் கடைகளில் பட்டாசு விற்பனை செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சென்னையின் பல இடங்களில் தீபாவளிக்காக அமைக்கப்பட்ட பட்டாசு கடைகளில் வியாபாரம் ஓரளவு சூடுபிடித்தது. அண்ணா சாலை, தீவுத்திடல், மன்றோ நிலை அருகே இருந்த கடைகளில் விற்பனை அதிகரித்தது.

இது குறித்து பட்டாசு கடை வியாபாரிகள் கூறியதாவது: அவ்வப்பொழுது மழை குறுக்கிட்டது. ஆனாலும், விற்பனையில் பாதிப்பில்லை. மக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் சென்றனர். வியாபாரம் நன்றாகவே இருந்தது என்றனர்.

அதே நேரத்தில் அண்ணா சாலையோர பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட கடைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்களில் வந்தவர்கள் அதிகளவு குவிந்ததால் இந்த நிலை உருவானது.

ஆன்லைன் பட்டாசு விற்பனை தடை குறித்து சைபர் கிரைம் அதிகாரிகள் கூறியதாவது: ஆன்லைனில் பட்டாசு என்ற வார்த்தையை அழிக்குமாறு அனைத்து இணையதளங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஏதேனும் பார்சல்களில் பட்டாசுகள் அனுப்பப்படுகிறதா என்று கொரியர் நிறுவனங்களை உஷாராக கவனிக்குமாறும் அலெர்ட் கொடுத்தோம்.

போலீசார், இணையதளங்களில் இருந்து பட்டாசு என்ற வார்த்தையை அழித்து விடுமாறு அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி செய்தாலுமே, பலர் இந்த வார்த்தையை தேடி முயற்சித்துள்ளனர் என்று இணையதள பணியாளர்கள் கூறியிருக்கின்றனர்.