நீதிபதி செல்லமேஸ்வர் கருத்துக்கு பார் கவுன்சில் மறுப்பு

டில்லி

ய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கூறிய கருத்துக்களுக்கு இந்திய பார் கவுன்சில் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 22ஆம் தேதி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கடந்த ஜனவரி மாதம் மற்ற மூன்று மூத்த நீதிபதிகளுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார்.   இந்திய நீதிமன்ற வரலாற்றில் இவ்வாறு நடந்தது முதல் முறையாகும்.   அந்த சந்திப்பில் தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தினார்.

தற்போது ஓய்வு பெறும் போது நீதிபதி செல்லமேஸ்வர் நீதிபதி ஜோசப்பை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு மறுத்ததை தவறு என கூறி உள்ளார்.  அத்துடன்  மத்திய அரசு தேவையான அளவு நீதிபதிகளை நியமிக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று பதில் அளித்தார்.  அவர் தனது பதிலில் மத்திய அரசு 325 நீதிபதிகளை நியமித்துள்ளதை சுட்டிக் காட்டினார்.   நேற்று இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “உயர்ந்த நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளுக்கு சுய அடக்கம் என்பது மறந்து விட்டது.  பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் கருத்து கூறுவதை நீதிபதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.  ஓய்வு பெறும் போது செல்லமேஸ்வரர் ஊடகங்களில் தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது.    இது தேவையற்ற கருத்தாகும்.

செல்லமேஸ்வரைப் போல படித்த மற்றும் உயர்பதவி வகித்தவரிடம் இருந்து இது போல கருத்துக்கள் கொண்ட அறிக்கை வருவது அவருக்கு அழகல்ல.    இதன் மூலம் தனது பதவிக்கு அவர் அவப்பெயர் அளித்துள்ளார்.  இது போல தவறான கருத்துக்களை வழக்கறிஞர்களாலோ அல்லது பொதுமக்களாலோ பொறுத்துக் கொள்ளவோ ஒப்புக் கொள்ளவோ இயலாது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தலைவருடன் பார் கவுன்சிலின் நான்கு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.