இயக்குநர் பார்த்திபன், வித்தியாசங்கள் காட்டுவதில் ரொம்பவே மெனக்கெடுவார். பிறருக்கு பரிசளிப்பது, வாழ்த்துவது, பேசுவது எல்லாமே வித்தியாசம்தான்.

“வாயால் சாப்பிடாமல் வேறுவிதமாக அதாவது காது, மூக்கில் ட்ரை பண்ணுவாரோ” என்று நினைக்கிற மாதிரி “வித்தியாசமாய்” பேசி விடுவார்.
முன்பு ஒரு நிகழ்ச்சியில், ஐஸ்வர்யாராயை புகழ்கிறேன் பேர்வழி என்று, பார்வையாளர்கள் முகம் சுழிக்கும்படி பேசினார். நேற்று இயக்குநர் பாரதிராஜாவை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்.

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் பாரதிராஜா, விதார்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் குரங்கு பொம்மை.. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட பார்த்திபன், மேடையில் பாரதிராஜாவை வைத்துக்கொண்டே வெளுத்துவாங்கிவிட்டார்:

“பாரதிராஜா அவர்களை பாராட்ட நமக்கு வாழ்நாளே பத்தாது. நான் கொஞ்சம் வித்தியாசமாக அவரை பாராட்ட நினைக்கிறேன். பாரதிராஜா ஒரு சிறந்த குரங்கு.
குரங்கு என்றால் ஒரு வார்த்தை ஆனால் நான்கு எழுத்துக்கள் இருக்கின்றன. சிறந்த ‘கு’ணவான், சிறந்த ‘ர’சனையாளர், இ’ங்’கிதம் அறிந்தவர், ‘கு’வாலிட்டியான ஒரு மனிதர்” என்றார்.

தொடர்ந்து, “எனக்கு தெரிந்து பாரதிராஜா ஒரு நல்ல மனிதரே தவிர, நல்ல நடிகரே கிடையாது. பாராதிராஜா நடிக்கும் என்று போட்டால் அவர் நடிச்சிட மாட்டார். நான் இந்த படத்தில் நான்கு, ஐந்து காட்சிகள் பார்த்தேன். நடிக்கவே இல்லை அவ்வளவு சிறப்பாக அப்படியே வாழ்ந்திருக்கிறார்.

நடிப்பு அவருடைய மிக சிறப்பான ஒரு விஷயம் அவர் நடிப்பு சொல்லிக் கொடுப்பாரே தவிர அவர் நடிக்கவே மாட்டார். நான் சொல்வது சினிமாவில் மட்டும் அல்ல. நிஜ வாழ்க்கையிலும், மேடையிலும் எங்கேயுமே நடிக்கத் தெரியாத அப்ராணி மனிதர் அவர். அதனால் தான் நிறைய இடத்தில் அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும்” என்றெல்லாம் பேசினார் பார்த்திபன்.

“இவர் பாராட்டுகிறாரா.. வித்தியாசமாக பேசுகிறேன் என்று கிண்டலடிக்கிறாரா” என்று பார்வையாளர்களிடையே முணுமுணுப்பு எழுந்தது.

மேலும், “அவ்வப்போது எசகுபிசகாக பேசி புண்படுத்துவது பாரதிராஜாவி்ன் பிறவிக்குணம். இளையராஜா, கமல், ரஜினி என்று யார் யாரால் இவர் முன்னேற்றம் அடைந்தரோ அவர்களைப் பற்றியே அவதூறாக பேசியவர். இயக்குநர் மணிவண்ணன் பற்றி இவர் மோசமாக பேசியதும், அந்த வருத்தத்திலேயே மணிவண்ணன் உடல் நலம் குன்றி மறைந்தது தெரிந்த விசயம்.

இப்படிப்பட்ட பாரதிராஜா, குணவானா, இங்கிதம் தெரிந்தவரா, குவாலிடி மனிதரா” என்று ஆளாளுக்கு பேச ஆரம்பித்துவிட்டார்கள் விழா அரங்கில்.

மேலும், “பாரதிராஜாவே ஒரு படத்தில் நடித்துவிட்டு தனக்கு மூக்கு சரியில்லை. இனிமே நடிக்கப்போவதில்லை என்று கூறியவர்தான். அவரே தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையில் இருக்கிறார். அவரைப்போய் குரங்கு என்றால் என்ன அர்த்தம்” என்றும் பேசிக்கொண்டனர்.

இப்படி மற்றவர்கள் பேசியதை மோப்பம் பிடித்துவிட்டாரோ என்னவோ, விழா முடிந்து திரும்புகையில் பார்த்திபனின் பேச்சு குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் பொங்கித் தீர்த்துவிட்டாராம் பாரதிராஜா.

“என்னய்யா பேசுறான் அவன். வித்தியாசமா பேசறேங்கிற பேர்ல குரங்குன்னு சொல்லுறான்” என்று ஆரம்பித்தவர், சகட்டுமேனிக்கு திட்டித் தீர்த்துவிட்டாராம் பாரதிராஜா.

வித்தியாசமாய் பேசுகிறேன் பேர்வழி என்று வில்லங்கமாய் பேசுவதை பார்த்திபன் தவிர்க்க வேண்டும்.