பேரம் படிந்ததா? ‘டார்ச் லைட் சின்னம்’ வேண்டாம் என எம்.ஜி.ஆர். மக்கள் கட்சி திடீர் ‘பல்டி’

சென்னை: எம்.ஜி.ஆர். மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என அக்கட்சித் தலைவர் விஸ்வநாதன் அறிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சின்னம் தொடர்பாக மநீம, எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கும் இடையே பேரம் நடைபெற்றிருக்கலாம் என்று சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில்  நடைபெற உள்ளது. இந்த நிலையில் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தேர்தல் சின்னங்களை கடந்தவாரம் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி பல கட்சிகளுக்கு அவர்கள் கேட்கப்பட்ட சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மட்டும், அவர்கள் கேட்ட டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்படவில்லை. ஆனால், புதுச்சேரியில் அவர்களுக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழகத்தில், டார்ச் லைட் சின்னம்,  விஸ்வநாதன் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் பதிவு செய்துள்ள  எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.  ஆனால், கமல்ஹாசனோ, தங்களுக்குத்தான் டார்ச் லைட் சின்னம் வேண்டும் என போர்க்கொடி தூக்கினார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட நிலையில், நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளது. அவரது மனுவில்,  மக்கள் நீதி மையம் கட்சிக்கு கடந்த தேர்தல்களில் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது. வரும் சட்டசபை தேர்தலில் புதுச்சேரியில் மக்கள் நீதி மையம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலுக்கு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு உத்தரவுப்படி டார்ச் லைட் சின்னத்தை மக்கள் நீதிமையம் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். அந்த சின்னத்தை எம்ஜிஆர் மக்கள் கட்சி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக எம்ஜிஆர் மக்கள் கட்சித்தலைவர் விஸ்வநாதன் திடீரென, தங்களுக்க டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என தெரிவித்து உள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன்புகூட விஸ்வநாதன், டார்ச் லைட் சின்னத்தை விட்டுக்கொடுக்க முடியாது என்று பிடிவாதம் காட்டினார். இது தொடர்பான வீடியோவும், செய்திகளிலும் ஊடகங்களில் வெளியாகின. இந்த நிலையில், எம்ஜிஆர் மக்கள் கட்சித்தலைவர் விஸ்வநாதனின் திடீர் பல்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  விஸ்வநாதன், அரசியல் பேரத்து பணிந்து விட்டார் சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

யார் இந்த விஸ்வநாதன்?

எம்ஜிஆர் மக்கள் கட்சித் தலைவராக உள்ள விஸ்வநாதன் சென்னை மாநகராட்சி பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். இவரைப்பற்றி மாநகராட்சி அலுவலகத்திலோ, ஆசிரியர்களிடமோ  விசாரித்தால், அவரின் செயல்பாடுகள் சந்தி சிரிக்கும். அவ்வளவு பணம் பேராசை கொண்டவர்தான்  விஸ்வநாதன்.  சக ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் பணத்தை பறிப்பதில் குறிக்கோளாக கொண்டவர். இன்றைக்கும், மாநகராட்சி வளாகத்தில் நடமாடி வருகிறார். இவரைக்கண்டதும் தலைதெறிக்க ஓடுபவர்களும் உண்டு.

சமீபத்தில் இவர் ஊடகம் ஒன்றுக்கு  பேட்டியளித்தபோது,  மக்கள் நீதி மயத்தைச் சேர்ந்த சிலர் தன்னிடம் டார்ச் லைட் சின்னம் குறித்து பேசியதாகவும், தன்னிடம் 50முறைக்கு மேல் தொடர்பு கொண்டதாகவும் விஸ்வநாதன் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி இருந்தார்.

டார்ச் லைட் சின்னம் எங்களுக்கு கிடைத்தது எம்ஜிஆர் கொடுத்த வெளிச்சம் என்று கூறும் விஸ்வநாதன், டார்ச் லைட் குறித்து 50க்கும்மேற்பட்டமுறை தன்னிடம் பேசியதாக தெரிவித்தவர், மக்கள் நீதி மய்யம் கட்சியைச சேர்ந்த சரவணன், முரளி அப்பாஸ் (ஊடகப்பிரிவு தலைவர்) தன்னிடம் பேசியதாக குறிப்பிட்டுள்ளவர், சின்னத்தை ஒருபோதும் விட்டுகொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக  தெரிவித்தார். இவரிடம் பேசியதை  முரளி அப்பாஸ்-ம் ஒத்துக்கொண்டார். ஆனால், வேறு சில விவரங்களை கேட்டதாக தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது விஸ்வநாதன் திடீர் பல்டி அடித்துள்ளார். தங்களுக்கு டார்ச் லைட் வேணாம் என்று கூறியிருப்பதுடன, இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க உள்ளதாகவும்,  டார்ச் லைட் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கியது ஏற்புடையது அல்ல, மேலும், டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவதில் எனக்கு விருப்பம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

விஸ்வநாதனின் இந்த திடீர் பல்டி, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  விஸ்வநாதன், டார்ச் லைட் சின்னத்தை  வேண்டாம் என்று கூறியிருப்பதால், அந்த சின்னம் மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு ஒதுக்கப்படுவது சாத்தியமாகி உள்ளது.

இந்த விவகாரத்தில் அரசியல் பேரம் நடைபெற்றுள்ளதாக  சமுக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பணப்பேராசை பிடித்தவரான  ஆசிரியர் விஸ்வநாதன், அரசியல் பேரத்துக்காக தொண்டர்களே இல்லாமல் ஒரு கட்சியை பதிவு செய்து வைத்துக்கொண்டு அலப்பறை செய்து வருவதாகவும், அவருடன் பணியாற்றிய ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நடைபெற்றுள்ள முதல் அரசியல் பேரம்  எம்ஜிஆர் மக்கள்கட்சிதானோ….

தன்னை யோக்கியவனாக காட்டிக்கொள்ளும் கமல்ஹாசன் இதற்கு என்ன சொல்லப்போகிறார்...?