பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி இணைப்பை கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு அன்புமணி கோரிக்கை

சென்னை:

பொதுத்துறை வங்கிகளான பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக இளைஞர்  அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்த  பொதுத்துறை வங்கிகள் இணைப்பு எலி – தவளை கூட்டணியாக அமைந்து விடும் எனவும் எச்சரிககை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளான பாங்க் ஆஃப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இணைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதன்மூலம் மத்திய அரசு மிகப்பெரிய தவறைச் செய்திருக்கிறது. வங்கிகள் இணைப்பு 3 வங்கிகளையும் கடுமையாகப் பாதிக்கும் என்பது தான் உண்மை.

சிறப்பாகச் செயல்படும் இரு பொதுத்துறை வங்கிகளுடன் மோசமாகச் செயல்படும் ஒரு வங்கியை இணைத்தால் 3 வங்கிகளும் சிறப்பாகச் செயல்படும் என்பது தான் வங்கிகள் இணைப்பின் அடிப்படை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இதை நம்புவதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை; வரலாறுகளும் இல்லை.

உலகம் முழுவதும் தாராளமயமாக்கல் கொள்கை தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், வங்கிகள் இணைப்பின் பயன்கள் குறித்து உலக அளவில் ஆய்வு நடத்தப்பட்டன.

1991-2009 இடையிலான காலத்தில் வங்கிகள் இணைப்பால் ஏற்பட்ட தாக்கங்கள் குறித்து 2011ம் ஆண்டில் உலக வங்கியும், தில்பர்க் பல்கலைக்கழகமும் இணைந்து 80 நாடுகளில் உள்ள வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தின.

பொதுத்துறை வங்கிகளை இணைப்பதால் உலக அளவிலான பெரிய வங்கிகள் தான் உருவாக்கப்படுமே தவிர, வேறு எந்தப் பயனும் ஏற்படாது என்று இந்த ஆய்வில் தெரியவந்தது. அதுமட்டுமின்றி வங்கிகள் பாதிக்கப்படும் ஆபத்துகள் அதிகரிக்கும்; வங்கிகளின் லாபம் குறையும் என்றும் ஆய்வுகள் தெரிவித்தன. அவை மிகவும் சரி என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.

பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைப்பதன் மூலம் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக மூன்றாவது பெரிய வங்கி உருவாக்கப்படும் என்று கூறப்படுகிறது. அது உண்மை தான். ஆனால், அதனால் யாருக்குப் பலன்?

இந்தியாவில் முதல் வங்கிகள் இணைப்பு 1993 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரைப்படி பஞ்சாப் தேசிய வங்கியுடன் நியூ வங்கி இணைக்கப்பட்டது. இதன் பயனாக, அதுவரை அதிக லாபம் ஈட்டி வந்த பஞ்சாப் வங்கி 1996 ஆம் ஆண்டில் முதன்முறையாக ரூ.96 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது.

அதேபோல், பாரத ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகள் அனைத்தும் படிப்படியாக முதன்மை வங்கியுடன் இணைக்கப்பட்டன. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த இணைப்பு நடைமுறைக்கு வந்தது. அந்த நிதியாண்டின் இறுதியில் பாரத ஸ்டேட் வங்கி 10 ஆயிரத்து 342 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்தது. அதன்பிறகும் பாரத ஸ்டேட் வங்கியின் இழப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பொதுத்துறை வங்கிகள் இணைப்பால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளுக்கு இரு மோசமான உதாரணங் களைப் பார்த்த பிறகும், மீண்டும், மீண்டும் பொதுத்துறை வங்கிகளை இணைக்கத் துடிப்பது தற்கொலைக்குச் சமமான முடிவு ஆகும்.

புதிதாக இணைக்கப்படவுள்ள பரோடா வங்கிக்கு 55 ஆயிரத்து 874 கோடி ரூபாய், தேனா வங்கிக்கு 15,866 கோடி ரூபாய், விஜயா வங்கிக்கு 7 ஆயிரத்து 579 கோடி ரூபாய் என மொத்தம் 79 ஆயிரத்து 319 கோடி ரூபாய் வாராக்கடன்கள் உள்ளன. மூன்று வங்கிகளும் இணைக்கப்படும் போது, அவற்றின் செயல்பாடுகளை இந்தச் சுமை தடுக்கும். அது வங்கிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இது அவற்றின் வளர்ச்சிக்கு உதவாது.

பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்றுமே தங்களின் வணிகப் பின்னணிக்கு ஏற்ற வகையில் உத்திகளை வகுத்து வணிகம் செய்து வருகின்றன. இவை மூன்றையும் இணைக்கும் போது பல இடங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கிளைகளை மூடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். வெவ்வேறு தளங்களில் வாழ வேண்டிய தவளையும், எலியும் எப்படி ஒன்றாக வாழ முடியாதோ, அதேபோல் வெவ்வேறு வணிகப் பின்னணி கொண்ட பொதுத்துறை வங்கிகள் இணைந்து செயல்பட முடியாது. இதை மத்திய அரசு உணராதது அதிர்ச்சியும், வியப்பும் அளிக்கிறது.

பாரத ஸ்டேட் வங்கிகளுடன் அதன் இணை வங்கிகள் இணைக்கப்பட்ட போது, இணை வங்கிகளின் பணியாளர்கள் வேண்டாத விருந்தாளிகளாக நடத்தப்பட்டனர். பணியிட மாற்றம் என்ற பெயரில் அவர்கள் தொலைதூரங்களுக்கு விரட்டியடிக்கப்பட்டனர்.

இதனால் வங்கிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. அதேபோன்ற விளைவுகள் இப்போதும் நடக்கும் வாய்ப்புகளை மறுக்க முடியாது.

எனவே, வங்கிகளின் நலனுக்கும், வங்கிப் பணியாளர்களின் நலனுக்கு எதிரான பரோடா வங்கி, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். அந்த மூன்று பொதுத்துறை வங்கிகளும் இப்போதுள்ள நிலையில் தொடர அனுமதிக்கப்பட வேண்டும்” என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

You may have missed