கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..!

டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் அடைந்து வருகிறது. முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் இயக்கம் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 26ம் தேதி வரை 1.40 கோடி சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று முதல் நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் 2ம் கட்டப் பணிகள் தொடங்கி உள்ளன. இதையடுத்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொரோனா தடுப்பூசி முதல் டோஸை இன்று போட்டுக் கொண்டார்.

டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு சென்று அவர் ஊசியை செலுத்தி  கொண்டார். முன்னதாக நேற்று பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.