நியூயார்க்: அமெரிக்காவின் புகழ்பெற்ற முன்னாள் கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டன் அணிந்திருந்த ஷு(ஜோடி), ரூ.4.2 கோடிக்கு ஏலம்போய் ஆச்சர்யத்தைக் கிளப்பியுள்ளது.
ஆன்லைன் முறையில் இந்த ஏலம் நடைபெற்றது. தற்போது 57 வயதான மைக்கேல் ஜோர்டன், அமெரிக்காவின் என்பிஏ கூடைப்பந்து தொடர்களில், சிகாகோ புல்ஸ் அணிக்காக, 15 சீசன்கள் விளையாடி, அந்த அணி 6 முறை சாம்பியன் பட்டம் வெல்வதற்கு காரணமாக இருந்தார்.
கடந்த 2015ம் ஆண்டில் கூடைப்பந்து ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலிலும் இடம்பெற்றார். தற்போது சார்லொட்டீ என்ற அணியின் உரிமையாளராக இருந்து நடத்தி வருகிறார். இவர் புகழ்பெற்ற வீரராக இருந்தபோது, இவர் அணிந்திருந்த ஷு, ஏலத்திற்கு வந்தது.
இந்த ஷு, ‘ஏர் ஜோர்டன்’ என்ற நிறுவனத்தால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகும். இடதுகால் 13 என்றும், வலதுகால் 13.5 என்றும் வேறுபட்ட எண்களைக் கொண்ட இந்த ஷு, ரூ.1 கோடிக்கே ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4.2 கோடிக்கு ஏலம் போய் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஷு  கடந்த 1985ம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இந்த ஷுவில் மைக்கேலின் கையொப்பம் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.