பேட்ஸ்மேனையும் கண்காணிக்கச் சொல்லும் அஸ்வின் – எதற்காக?

சென்னை: நோ பால் வீசப்படுவதை, மூன்றாவது நடுவர் கண்காணிப்பார என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பவுலர் முனையில் பேட்ஸ்மேன் கிரீசில் நிற்பதையும் கண்காணிக்க வேண்டும் என்றுள்ளார் இந்திய சுழல் ரவிச்சந்திரன் அஸ்வின்.

அவர் கூறியுள்ளதாவது, “பந்து வீச்சாளர், பந்தை வீசும் முன்னரே பேட்ஸ்மேன் கிரீசை விட்டு நகர்ந்து வெளியே செல்வதை தொழில்நுட்ப உதவியுடன் கண்காணிக்க வேண்டும் என்று கருதுகிறேன். அப்படிச் செய்தால், அதன் மூலம் எடுக்கும் ரன்கள் கிடையாது என்று தீர்ப்பளிக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் இப்படி செய்து எடுக்கும் ரன்னை அனுமதிக்கக் கூடாது.

இதன்மூலம், முன் கிரீஸ் விவகாரத்தில் பவுலருக்கு ஒருவிதி, பேட்ஸ்மேனுக்கு ஒரு விதி என்ற பாரபட்சம் களையப்படும்.

ஏனெனில், ரன்னர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் பந்துவீசும் முன்னதாகவே, 2 அடி முன்னால் செல்கிறார். இதனால் 1 ரன் இரண்டு ரன்னாக மாற்றப்படுகிறது என்றால் அடுத்த பந்தும் அதே பேட்ஸ்மென் தான் ஸ்ட்ரைக்கில் இருப்பார்.

அதே பேட்ஸ்மென் ஸ்ட்ரைக்கில் இருக்கும் போது, அடுத்த பந்து நான்காகவோ அல்லது சிக்சராகவோ அடிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, பந்துவீச்சாளர் கணக்கில் 7 ரன்கள் ஆகி விடுகிறது. ஒரு ரன்னுக்குப் பதிலாக, ஒரு டாட் பாலுக்குப் பதிலாக இப்படி நடந்து விடுகிறது, வேறொரு பேட்ஸ்மென் அந்த கிரீசில் இருந்தால் டாட் பால் சாத்தியம்.

டெஸ்ட் போட்டியிலும் ஒரு பேட்ஸ்மென், தான் ஸ்ட்ரைக்கிலிருந்து விலகி ரன்னர் முனைக்கு வருவதற்கு ரன்னர் இப்படி 2 அடி முன் கூட்டியே முன்னால் நகர்ந்து ஒரு சிங்கிளை எடுக்க உதவலாம். மாறாக, அந்த பேட்ஸ்மேனே ஆடினால் அவர் அவுட் ஆகக்கூடிய வாய்ப்புகூட உள்ளது.

எனவே, ரன்னர் முனை பேட்ஸ்மென் வீசும் முன்பு கிரீசை விட்டு வெளியேறினால் அதன் மூலம் எடுக்கப்படும் ரன்னை அனுமதிக்கக் கூடாது” என்று நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார் அஸ்வின்.

கார்ட்டூன் கேலரி