விரைவில் 8 தமிழக ரெயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதி
சென்னை
செங்கல்பட்டு, தாம்பரம் அரக்கோணம் உள்ளிட்ட 8 ரெயில் நிலையங்களில் விரைவில் பேட்டரி வாகன வசதி அளிக்கப்பட உள்ளது.
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தற்போது 4 பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக முதியோருக்கு வசதியாக உள்ள இந்த வாகனங்களின் சேவை விரைவில் மேலும் விரிவு படுத்தப்படும் எனத் தென்னக ரெயில்வே அறிவித்திருந்தது. அவ்வகையில் இந்த பேட்டரி வாகன வசதி மேலும் 8 ரெயில் நிலையங்களுக்கு வழங்கப்பட உள்ளது.
தென்னக ரெயில்வே அதிகாரிகள் இது குறித்து, “நாளுக்கு நாள் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் போன்ற பெரிய ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆகவே, முக்கிய ரயில் நிலையங்களில் படிப்படியாக அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். குறிப்பாகப் பெரிய ரயில் நிலையங்களில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் போன்றவர்கள் விரைவு ரயில் பெட்டிகளைக் கண்டறிந்து பயணம் செய்வது சிரமமாக உள்ளது.
ஆகவே அவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களில் பேட்டரி வாகன வசதியை விரிவுபடுத்தத் தீர்மானித்துள்ளோம். ஏற்கனவே சென்னை சென்ட்ரலில் தற்போது 4 பேட்டரி வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அங்கு கூடுதலாக பேட்டரிவாகனங்களை இயக்க உள்ளோம்.
அத்துடன், தாம்பரம், காட்பாடி, அரக்கோணம், செங்கல்பட்டு, ஜோலார்பேட்டை, திருவள்ளூர், ஆவடி உள்ளிட்ட 8 ரெயில் நிலையங்களில் பேட்டரி வாகன சேவையைத் தொடங்க உள்ளோம். தற்போது இதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் அடுத்த சில மாதங்களில் பேட்டரி வாகன சேவை தொடங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.