பேட்டரி பேருந்து சேவை தொடங்கிய 6 ஆவது மாநிலம் கேரளா

 

 திருவனந்தபுரம்

கேரள மாநிலத்தில் பேட்டரியில் இயங்கும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசை குறைக்க  கேரள அரசு கடும் முயற்சி செய்து வருகிறது.   அதை ஒட்டி டீசலில் ஓடும் பேருந்துக்கு பதிலாக பேட்டரியால் இயங்கும் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டது.    ஏற்கனவே இந்தியாவில் இமாசலப் பிரதேச, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா ஆகிய ஐந்து மாவட்டங்களில் பேட்டரியில் இயங்கும் பேருந்து சேவை நடைபெறுகிறது.

இன்று ஆறாவது மாநிலமாக கேரளாவில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.  திருவனந்தபுரத்தில் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் டொமின் தக்கன்காரியால் இந்த சேவை தொடங்கி வைக்கப்பட்டது.   அப்போது அவர், “இன்று சோதனை அடிப்படையில் இந்த பேருந்து சேவையை தொடங்கி உள்ளோம்,   இன்னும் 6 மாதங்களில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் சுமார் 300 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன” என தெரிவித்தார்.

இந்த பேருந்து 5 மணி நேரம் சார்ஜ் செய்யப்பட்டால் 350 கிமீ தூரத்துக்கு ஓடும்.   முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் 35 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.  தானியங்கி கதவுகள், வேக கட்டுப்பாடு கருவி ஆகியவைகளுடன் இந்த பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது.  மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் இந்த பேருந்தில் ஏறி இறங்க முடியும்.

இந்த பேருந்தில் குடிநிர், கழிவறை வசதிகள் உண்டு.  பயணிகள் மொபைல் சார்ஜ் செய்யும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.