“அடுத்த படத்துல பாருங்க.. சூப்பரா இருப்பேன்!: விருப்ப ஓய்வு பெற்று திரைக்கு வந்த யூத் நடிகர் அரசர்ராஜா பேட்டி!

சென்னை அண்ணா சாலையில பராக்கு பார்த்துக்கிட்டே போயிட்டிருந்தேன். பரபரப்பான சுவர்களில் சர்கார் விஜய் இன்னமும் முறைச்சிக்கிட்டிருந்தாரு..  2.o ரஜினி சிட்டி சிரிச்சிக்கிட்டிருந்தாரு… ஏன்.. நேற்று வெளியான “ஜானி” பிரசாந்த்தும் லுக் விட்டுக்கிட்டிருந்தாரு.

இப்படி போஸ்டர் நெரிசல்ல சிக்கி கெச்சலாக ஒருத்தர் இம்சைப்பட்டு போஸ் கொடுத்துக்கிட்டிருந்தாரு. கூடவே “பயங்கரமான ஆளு” என்று படத்தின் தலைப்பே மிரட்டியது. அதோட, “வீழ்வேன் என்று நினைத்தாயோ.. வருவேன் வீழ்த்திட பயங்கரமான ஆளு” என்று படா பயங்கரமாக ஒரு கேப்சன் வேற!

மண்டைக்குள்ள பொறிதட்டுச்சு. இவர்தான்யா நாம தேடிக்கிட்டிருக்கிற ஆளுன்னு போன் போட்டேன்.

என்னை அறிமுகப்படுத்திக்கிட்டு,  “உங்களைப் பத்திச் சொல்லுங்க சார்”னு கேட்டேன்.

“என் பேருதான் போஸ்டர்ல பார்த்திருப்பீங்கலே.. அரசர் ராஜா! . பயங்கரமான ஆளு அப்படிங்கிற பேர்ல படம் தயாரிச்சி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இரட்டை வேடத்துல நடிச்சருக்கேன். அந்தப் படத்தை நேத்து தமிழ்நாடு  முழுசும் நாப்பது திரையரங்கத்துல வெளியிட்டும் இருக்கேன்.. அதுதான் மிகப்பெரிய சாதனை!”

“படம் எடுக்கறதவிட வெளியிடறதுதான் சாதனையா ஆயிடுச்சு..”

“உண்மைதானே.. ! தவிர நூறு கோடி, நானூறு கோடின்னு பட்ஜெட் போட்டு படத்தை சொன்ன தேதியில வெளியிட முடியாம தவிக்கிறத பாக்கிறோம். ஆனா நம்ம பட பட்ஜெட்டே அறுபலது லட்சம்தான். ஆனா சொன்ன மாதிரி டிசம்பர் 14ம் தேதி தமிழ்நாடு முழுசும்.. வெளியிட்டுட்டேனே! இது சாதனைதானே!”

“ரொம்ப மகிழ்ச்சி. அதென்ன அரசர் ராஜா.. சொந்தப்பெயரே இதானா. அதென்ன ரெண்டு ராஜா…”

“இ வீட்ல வச்ச பேரு கலிய பெருமாள். ராஜ தேவன்ங்கிற புனைப்பேர்ல ஏற்கெனவே குறும்படம் இயக்கியிருக்கேன். என் அப்பா பேரு செந்த திருநாவுக்கரசர்.

புனைப்பயெர்ல இருக்கிற ராஜா. அப்பா பெயர்ல இருக்கிற அரசர்.. ரெண்டுத்தையும் கணெக்ட் பண்ணி அரசர் ராஜா ஆக்கிட்டேன்.

இப்போ பாலாஜி சக்திவேல், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புரஜா.. இப்படி அப்பா பேரை சேர்த்துக்கிறதுதானே டிரெண்ட்? அதான்!”

“நிஜயமாவே நீங்க பயங்கரமான ஆளுதான்! போகட்டும் முதல் படத்திலேயே கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கி, தயாரிச்சு இரட்டை வேடத்துல நாயகனா நடிச்சிருக்கீங்க..! இதுக்கு முன்னால யாருகிட்ட உதவி இயக்குநரா இருந்தீங்க..?”

”யாருகிட்டயும் வேலை பார்க்கலை. ஆனா பாக்யராஜ் அசிஸ்டெண்ட்டுன்னு சொல்லலாம். அதாவது அவர்கிட்ட அசிஸ்டெண்டா சேரணும்னு நினைச்சேன். பட் முடியலை. ஆனாலும் என்னோட மானசீக குரு அவருதான்..!”

“ஓ…  ஏன் பாக்யராஜ்கிட்ட சேர முடியல..”

“அது இருக்கும் இருபத்தஞ்சு வருசம்.  பாக்யராஜ் படங்களை எல்லாம் பார்த்து அவர் மேல ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டேன். நேரா சென்னைக்கு வந்தேன். அப்போ அவர்கிட்ட பார்த்திபன், பாண்டியராஜன் எல்லாம் உதவியாளரா இருந்தாங்க. நானும் பாக்யராஜ்கிட்ட சேரணும்னு முயற்சி பண்ணேன். பட் முடியலை. அந்த நேரத்தில எனக்கு ஆசிரியர் வேலை கிடைச்சுது.. அதான் அப்புறம் பார்த்துக்கலாம்னு கொஞ்சநாள் கேப்  விட்டுட்டு மறுபடி சினிமாவுக்கு வந்திருக்கேன்!”

“கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்..”

“எனக்கு சொந்த ஊர் சீர்காழி. சீர்காழி கோவிந்தராஜன், சீர்காழி சிவசிதம்பரம்.. இவங்களோட சொந்த ஊர்தான் அது. எம்.எஸ்.சி. கணிதம் அப்புறம் பி.எட் படிச்சிருக்கேன். 1991 காலகட்டத்துல சினிமாவுல ட்ரை பண்ணேன், அப்போ  கோதண்டபுரம் ராமகிருஷ்ணா மேநிலைப்பள்ளியில ஆசிரியர் வேலை கிடைச்சுது. அதனால அதுல சேர்ந்துட்டேன்.

அப்புறம் 2014ல விருப்ப ஓய்வு பெற்று மறுபடி சினிமா துறைக்கு வந்துட்டேன்!”

“ஓ.. எந்த இயக்குநர்கிட்டயும் உதவியாளரா இல்லாம நேரடியா படம் பண்ணியிருக்கீங்க.. வாழ்த்துகள்!”

“மகிழ்ச்சி..! ஆனா  குறும்படம் எடுப்பது எப்படின்னு ஒரு பயிற்சி பட்டறையில மூணு நாள் கலந்துகிட்டேன். அப்புறம் ஒரு தனியார் அகடமியில எட்டு மாசம் இயக்குநர் பயிற்சி படிச்சேன்.

“மை டியர் ராம்” என்று குறும்படம் எடுத்தேன். 15 நிமிசம் ஓடும்.  அதுல ஒரு ஆட்டை வச்சு எடுத்தேன். கிட்டதட்ட அதே கதையைத்தான் சைவம்ங்கிற பேர்ல  கோழிய வச்சு எடுத்திருப்பாங்க. பட் என்னை வச்சி காப்பி அடிச்சாங்கன்னு சொல்லமாட்டேன். ஒரே மாதிரி திங்கிங்கதான்!”

“பெரிய மனசுதான் உங்களுக்கு..!”

“ம்…. . அப்புறம் சில படங்களுக்கு ஸ்கிரிப்ட் ஒர்க் செஞ்சி கொடுத்திருக்கேன்..”

“எந்தெந்த படங்கள்..”

“அது எதுவும் வெளியாகலை..”

“சரி.. முதல் படத்துலயே ரெட்டை வேடம்.. அதுவும் இளமையான வேடம் பண்ணியிருக்கீங்க.. ஆனா கொஞ்சம் யூத்தான ஹீரோவா போட்டிருந்தா இன்னும் பெட்டரா இருக்கும்னு தோணுறதா சில பேரு சொல்றாங்க..?”

“என்ன செய்ய.. ஐம்பத்தி மூணு வயது ஆகுதே. பட்.. என்னைவிட வயசானவங்க எல்லாம் யூத்தா நடிக்கிறாங்களே..! அதனால தப்பில்லே! நானே இயக்கி, நடிக்கவும் செஞ்சதால சில விசயங்களை கவனிக்க முடியலை.

படத்துல..சில கோணத்துல பார்த்தா சூப்பரா இருப்பேன். வேற சில கோணத்துல பார்த்தா வயசான மாதிரி தெரியும். அதைத்தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். பட் ஷூட்டிங்கல பக்கத்துல இருந்த ஆளுங்கதானே சொல்லணும்.. .யாரும் சொல்லலை. அவ்வளவு ஏன்… சில காட்சியில சட்டை பேண்ட்டே கசங்கிப்போய் கிடக்கு. அதைக்கூட யாரும் சொல்லலை.. நானே ஒத்தையா இயக்கி.. நடிச்சு.. எம்புட்டு சிரமம் பாருங்க..! இன்னொன்னு… சின்ன பட்ஜெட் படம் என்பதால் மானிட்டரும் பார்க்க முடியலை…!”

“ப்ச் . உண்மைதாங்க..! அதான்… அந்த வேடத்துக்கு ஏத்த யூத் யாரையாச்சும் போட்டிருக்கலாமே! உங்களுக்கு பாரம் குறைஞ்சிருக்குமேனு கேட்டேன்..”

“ஆமாங்க! சூர்யா மாதிரி பெரிய ஹீரோவ வைச்சு எடுக்கத்தான் முயற்சி பண்ணேன். சென்னைக்கு வந்தவுடன்தான் அவங்களை எல்லாம் பார்க்கிறதே எவ்வளவு பெரிய விசயமா இருக்குண்ணு புரிஞ்சுச்சு. ஆனாலும் விடலை.. பிரசாந்தை வச்சு எடுக்கலாம்ணு  அவரோட அப்பா தியாகராஜன்கிட்ட பேசினேன். அவரு வெயிட் பண்ணுங்கன்னு சொன்னாரு. அப்புறம் நடிகர் மாதவன்கிட்ட போன்ல பேசினேன். அவரு தயாரிப்பாளரை முடிவு பண்ணிட்டு வாங்க்னு சொன்னாரு.  அடுத்து . “வில் அம்பு” பட ஹீரோ ஹரிஷ் கல்யாண்கிட்ட பேசினேன். ஸ்கிரிப்ட் கேட்டாருன்னு கொடுத்துட்டு வந்தேன். படிச்சு பார்த்துட்டு என்ன நினைசசாரோ.. பிஸியா இருக்கறதா சொல்லிட்டாரு.

மறுபடி தியாகராஜனிடம் கேட்டேன். அவரு, “இந்தக் கதை ரொம்ப நல்லா இருக்கு. ஆனா பெரிய நடிகருங்க கால்ஷீட் கிடைக்கிறது கஷ்டம். அதனால நீங்களே ஹீரோவா பண்ணுங்க”னு சொன்னாரு. அதனால நானே டபுள் ஆக்ட்ல நடிச்சுட்டேன்!”

“பெரிய நடிகருங்க இல்லாட்டியும்.. யாராச்சும் புதுப்பையனை போட்டிருக்கலாமே!”

“நீங்க வேற.. நானே அந்த கேரக்டர் நடிக்க கஷ்டப்பட்டேன். புதுப்பையனுங்க தாங்குவங்களா.. படு ஸ்ட்ராங்கான கேரக்டர் அது! தவிர பக்கத்துல இருந்தவங்க எல்லாம் நீங்களே நடிங்கன்னு சொன்னாங்க. அதான்..”

“அதென்ன தலைப்பு பயங்கரமான ஆளு… மிரட்டுதே!”

“ஆமாங்க.. கதையே டெரரான சப்ஜெக்ட்டுல்ல! கூடுவிட்டு கூடு பாய்ற கதை. முப்பது வருசத்துக்கு முன்னால நீயா படம் பார்த்தப்ப மனச பாதிச்சுது. அந்த இம்ப்ரேசன்ல அப்போ இந்தக்கதை மனசுக்குள்ள ஓடுச்சு. ஆனா காலம் கனிய கொஞ்சம் லேட் ஆயிடுச்சு.

போன 2017 நவம்பரில் படப்பிடிப்பு போயி 2018 மார்ச்ல படப்பிடிப்பு முடிஞ்சது. இப்போ வெளியிட்டுட்டேன்!”

“குட்! ஆனா எதுக்காக சென்சார்ல ஏ சர்டிபிடிகேட் கொடுத்தாங்க?”

”கிளைமாக்ஸ் ஒருத்தரை எரிக்கிற மாதிரி காட்சி. அதனால அப்படி கொடுத்தாங்க. மேல் முறையீட்டுக்கு போயிருக்கலாம்.. அதுக்கு ஒரு ஐம்பதாயிரம் செலவாகும்.. அதனால அப்படியே விட்டுட்டேன்!”

“ஆனா கடன் எதுவும் இல்லாம படத்த முடிச்சிட்டீங்க.. அப்படித்தானே..!”

“ஆமாம். விருப்ப ஓய்வுனால வந்த பணம்… அப்புறம் சில சொத்துக்களை வித்தது.. இப்படி பணம் புரட்டி  படம் எடுத்துட்டேன். ஆனா படத்தை வெளியிடறதுக்குத்தான் கொஞ்சம் கடன் வாங்க வேண்டியதா போச்சு! ஏன்னா படத்தை வெளியிட யாரும் முன்வரை. அதனால சொந்தமாவே வெளியிட்டுட்டேன்.!”

“அடுத்து என்ன படம் பண்றீங்க..”

“இந்த பயங்கரமான ஆளு படத்தோட கோ டைரக்டர் சாய்ராம் ரிசபராசின்னு ஒரு கதை வச்சிருக்காரு. பக்கா ஸ்கிரிப்டு. அதுல   நடிக்கிறேன். நானே நடிச்சு இயக்கினா சிரமமா இருக்கு. அதனா சாய்ராமே இயக்குறாரு  அதுல பக்காவா இருப்பேன் பாருங்க..!”