மும்பை: கரீபியன் பிரீமியர் லீக் போட்டி தொடர்பாக தினேஷ் கார்த்திக் அளித்த மன்னிப்பு கடிதத்தை பிசிசிஐ ஏற்றுக்கொண்டு பிரச்சினையை முடித்து வைத்தது.

கரீபியன் பிரீமியர் லீக் போட்டியின்போது பங்கேற்கும் அணி ஒன்றின் டிரெஸ்ஸிங் அறையில் இருந்துகொண்டு தினேஷ் கார்த்திக் போட்டியை ரசித்த செயல் மத்திய ஒப்பந்தத்தை மீறும் செயல் என்று பிசிசிஐ அமைப்பு தினேஷ் கார்த்திக்கிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதனையடுத்து, தினேஷ் கார்த்திக் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கப்பட்டது. இதனையடுத்து அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ அப்பிரச்சினை முடிவுக்கு வந்ததாக அறிவித்தது.

பிசிசிஐ அமைப்புடனான மத்திய ஒப்பந்தத்தின்படி, தினேஷ் கார்த்திக் இதுவரை இந்திய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 94 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.

இதனடிப்படையில் கரீபியன் நிகழ்வுக்காக பிசிசிஐ அமைப்பிடம் அவர் அனுமதி கேட்டிருக்க வேண்டும். ஏனெனில், ஒப்பந்தப்படி வேறு எந்த தனியார் லீக்குடனும் அவர் தொடர்பு வைத்திருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.