ந்திய பெருஞ்சுவர் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட்டிற்கு, பிசிசிஐ  கிரிக்கெட்டின் உயரிய பதவியான தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக நியமனம் செய்து கவுரவித்து உள்ளது.

டிராவிட்  ஜூலை 1 முதல் என்.சி.ஏ தலைவராக பொறுப்பேற்கவிருந்தார், ஆனால் இந்தியா சிமென்ட்ஸில் அவர் இருப்பதால், அவர் பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் பிசிசிஐ  நிர்வாகிகள் குழு (CoA) டிராவிட் இந்தியா சிமென்ட்ஸின் துணைத் தலைவர் பதவியை கைவிடுமாறும்   அல்லது அவர் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யும் வரை விடுப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்திய சிமென்ட்ஸ் நிறுவனம், ராகுலை விடுப்பில் அனுப்பி உள்ளது. இதையடுத்து பிசிசிஐ அவருக்கு தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவி வழங்கி உள்ளது.

இந்திய அளவில் உள்ள அனைத்து ஆண், பெண் கிரிக்கெட் வீரர்களுக்கு சிறந்த ஆலோசகராகவும், பயிற்சியாளராகவும் செயல்படுவார். மேலும் அனைத்து வகையான அணிகளின் பயிற்சியாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு இந்தியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ராகுல் டிராவிட் தற்போதுவரை  19 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார்.

ராகுல் திராவிட்:

1990களின் பிற்பகுதியிலும், 2000 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலும், இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத வீரராக திகழ்ந்தவர் ராகுல் திராவிட். அப்போது இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய போட்டிகளில் தடுமாறிக் கொண்டிருக்கும்போது, பெரும்பாலானோர் எதிர்பார்க்கும் முக்கிய வீரர் ராகுல் டிராவிட்தான்.

இந்திய அணியில் பல நட்சத்திர பேட்ஸ்மேன்கள், அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தபோதிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றி தேடித்தருவது, டெஸ்ட் போட்டிகளில் தோல்விகளை தவிர்ப்பது ஆகியவை ராகுல் டிராவிட்டால் மட்டுமே சாத்தியம் என்ற திடமான நம்பிக்கை ரசிகர்களிடையே ஏற்பட்டு இருந்தது.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் ஆகிய இரு வடிவங்களிலும் 10,000 ரன்களை கடந்தவர், டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவு கேட்ச்கள் (210) பிடித்தவர் என்று பல சாதனைகள் டிராவிட் வசம் உள்ளன. தனது அற்புத தடுப்பாட்டத்தால் ‘வால்’ (தடுப்புச் சுவர்) என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் மற்றும் விமர்சகர்களால் அழைக்கப்பட்டார். அதன் காரணமாகவே அவரை கிரிக்கெட் ரசிகர்கள் ‘இந்திய பெருஞ்சுவர்’  என்று அன்போடு குறிப்பிட்டு வந்தனர்.