டில்லி

ந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 7 கோடி அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இந்தியா – பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை.   மத்திய அரசு அனுமதி தராததால் தொடர்களில் பங்கேற்க முடியாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.   அத்துடன் மத்திய அரசு அனுமதி இல்லாததால் கடந்த 2014 ஆம் ஆண்டு இருநாடுகளுக்கிடையே ஆன கிரிக்கெட் தொடர் குறித்து போடப்பட்ட ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நிறைவேற்றவில்லை.

இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப் படாததால் தங்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் பாகிஸ்தான் வாரியம் புகார் அளித்துள்ளது.   அத்துடன் இதற்காக இந்திய வாரியம் தங்களுக்கு 7 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பிடு தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.   இது குறித்த விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.

இந்த விசாரணை நடத்தும் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு இறுதி ஆகும்.   இந்த தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்ய முடியாது.   இந்த வருடம் அக்டோபர் 1 முதல் 3 வரை விசாரணை நடக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்கள் குறித்த மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என இந்திய கிரிக்கெட் வாரியம் மத்திய அரசைக் கேட்டுள்ளது.    இதற்கு மத்திய அரசின் பதில் இன்னும் வரவில்லை.