டில்லி

ந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ரசிகை சாருலதா படேல் மரணத்துக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் ஜூன் – ஜூலை மாதங்களில் நடைபெற்றது. அப்போது  தொடரின் லீக் போட்டிகளில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய போட்டியின் போது சாருலதா படேல் எனும் 87 வயதுடைய மூதாட்டி ஒருவர் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியைக் கண்டு களித்து இந்திய அணி வீரர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். அந்த போட்டியில் மைதானத்தில் இருந்த அனைத்து படக்கருவிகளும் அந்த மூதாட்டியின் பக்கமும் திரும்பியது.

சாருலதா படேல் தனது வயதை மறந்து இந்திய அணியின் ஒவ்வொரு சிக்சருக்கும், விக்கெட்டிற்கும் கையில் வைத்திருந்த ஊதுகுழலை உற்சாகமாக ஊதிக் கொண்டிருந்தார்.  அத்துடன் அவர் இந்தியாவின் தேசியக் கொடியினை ஆடைக்கு மேலே அணிந்திருந்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு, இந்திய வீரர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தார்.  இந்த போட்டி முடிந்தவுடன், அவரை சந்தித்த இந்திய வீரர்களான விராட் கோலி, டோனி, ரோகித் சர்மா ஆகியோர் ஆசி பெற்றனர்.  அப்போது விராட் கோலிக்கு வாழ்த்துக் கூறி, சாருலதா முத்தமிட்ட காட்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கடந்த 13 ஆம் தேதி அன்று சாருலதா படேல்  மரணம் அடைந்ததாக அவரது கிரிக்கெட்.டாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ‘கடந்த  13/01/2020 அன்று மாலை 5.30 மணிக்கு எங்கள் பாட்டி இயற்கை எய்தினார். பாட்டி ஒரு இனிமையான, அசாதாரணமான பெண்மணி. சென்ற ஆண்டு அவரை சிறப்பு மிக்கவராக உணரவைத்த அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.  வீரர்கள் விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவிற்கும் மிக்க நன்றி.  பாட்டி உங்களைச் சந்தித்தது அவரது வாழ்க்கையின் சிறந்த நாள் ஆகும். பாட்டியின் ஆன்மாவை சிவபெருமான் ஆசீர்வதிப்பாராக’ என  பதிவிடப்பட்டுள்ளது.

பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில்  ”நமது இந்திய அணியின் மேன்மையான ரசிகை சாருலதா படேல் ஜி எப்போதும் நம் இதயத்தில் நிலைத்திருப்பார், கிரிக்கெட் விளையாட்டின் மீதான அவரது ஆர்வம் நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கும். அன்னாரது ஆன்மா அமைதியில் நிலைத்திருக்கட்டும்’ என இரங்கல் தெரிவித்துள்ளது.