உலகளாவிய கொரோனா முடக்கத்தால், உலகின் ஏகப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் பொருளாதார நடவடிக்கை மட்டும், சிறிய சேதத்துடன் தப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

உலக கிரிக்கெட் தொடர்களிலேயே அதிகம் பணம் புழங்கக்கூடிய ஒன்றாக பார்க்கப்படுவது ஐபிஎல் தொடர். உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான இந்திய கிரிக்கெட் வாரியம் இத்தொடரை நடத்துகிறது.

இந்தாண்டு மார்ச்சில், உள்நாட்டில் துவங்கியிருக்க வேண்டிய ஐபிஎல் தொடர், கொரோனா முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம், நிலைமை தொடர்ந்து சிக்கலாகவே இருக்கையில், ஐபிஎல் தொடர் ரத்துசெய்யப்படும் என்றெல்லாம் தகவல் பரவியது.

ஆனால், விடாப்பிடியாக இருந்து பிசிசிஐ அமைப்பு, தொடரை துபாய்க்கு நகர்த்தியது. சொல்லிவைத்தாற்போல், ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி-20 உலகக்கோப்பை தொடரும் ரத்தானது.

இந்நிலையில், ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல், ஐபிஎல் தொடரின் 60 போட்டிகளும், துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி ஆகிய இடங்களின் 3 மைதானங்களில் நடத்தப்பட்டன. மும்பை அணி 5வது முறையாக கோப்பையை வென்றது.

இந்த வெற்றியானது மும்பை அணிக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக, பிசிசிஐ அமைப்பிற்கே வெற்றி என்று கூறப்படுகிறது. ஏனெனில், இத்தொடரை ரத்து செய்திருந்தால் பிசிசிஐ அமைப்பிற்கு மொத்தமாக 536 மில்லியன் டாலர்கள் நஷ்டமாகியிருக்கும் என்று கூறப்படுவதால், இத்தொடரை நடத்தி முடித்ததானது பிசிசிஐ அமைப்பிற்கு பெரிய வெற்றியாக கூறப்படுகிறது.

ஏனெனில், மைதானத்தில் ரசிகர்கள் இல்லாத நிலையிலும், சிறிய சேதாரம் தவிர்த்து, நினைத்த வருவாய் கிடைத்ததாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.