மான்செஸ்டர்: அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து, உலகக்கோப்பை போட்டியிலிருந்து வெளியேறிவிட்டாலும், சரியான நேரத்தில் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது இந்திய அணி.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்திய அணி நாடு திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளை பிசிசிஐ அமைப்பால் எவ்வளவோ முயன்றும் சரியான நேரத்தில் ஏற்பாடு செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், மான்செஸ்டரில் தங்களின் அணி ஹோட்டலை இந்திய அணியினர் காலிசெய்துவிட்டாலும், அவர்கள் ஜுலை 14ம் தேதி நடக்கும் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரையிலோ அல்லது அதையும் தாண்டியோ, மான்செஸ்டரிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்கள் உட்பட அனைவருமே உடனடியாக நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ முறையான ஏற்பாடுகளை திட்டமிட்டு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேசமயம் சில வீரர்களுக்கு உடனடியாக நாடு திரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சில வீரர்கள் வேறு எங்கேனும் ஒரு இடத்திற்கு சில நாட்கள் ஓய்வுக்காக செல்லலாம் என்ற சூழலும் நிலவுகிறது.