லண்டன்: ராணுவ முத்திரை இடம்பெற்ற கையுறையை தோனி அணிவதால் எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து, ஐசிசி விதிமுறைகளை பின்பற்றுவதற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தை அறிவுறுத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது லண்டனில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரிய முதன்மை செயல் அதிகாரி ராகுல் ஜோரியிடம் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க, உச்சநீதிமன்றத்தால் ஒரு குழு அமைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

இக்குழுவின் தலைவர் வினோத் ராய் கூறியதாவது, “ஒவ்வொரு அமைப்புக்கும் தனியான விதிமுறைகள் உண்டு. ஐசிசி அமைப்பும் அதற்கு விதிவிலக்கல்ல. எனவே, அந்த அமைப்பின் விதிமுறைகளை பின்பற்றுமாறு இந்தியக் கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக்கொண்டுள்ளோம்.”

ராணுவ முத்திரை இடம்பெற்ற கையுறையைப் பயன்படுத்தவதற்கு நாங்கள் ஐசிசி அமைப்பிடம் தனி அனுமதி கேட்டிருந்தோம். ஆனால், அவர்கள் அதை அனுமதிக்கவில்லை. தங்களின் சட்டம் குறித்து எங்களிடம் விளக்கினார்கள்” என்றார்.