டில்லி:

லகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட பாகிஸ்தானுக்கு தடை விதியுங்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுத உள்ளது.

கடந்த 14-ம் தேதி ஜம்மு – காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில், நடைபெற்ற தற்கொலைப்படை பயங்கரவாத தாக்குதலில், 44 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல் லப்பட்டனர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போக்கு மக்களிடையே அதிகரித்து உள்ளது.

இந்த கொடூரமான தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஜெய்ஷ்இமுகமது என்ற பயங்கரவாத அமைப்பின் தலைமையிடம் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகிறது. மேலும் பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி அமைக்க உதவியதால், அந்த பயங்கரவாத அமைப்பின்   தலைவர் ஹபீஸ் சையதுக்கு, பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது.

பாகிஸ்தானின், இந்த செயலுக்கு  இந்தியா உள்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.  பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 200 சதவிகிதம் வரி உயர்த்தி நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிரான வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்த நிலையில், வரும் மே, ஜூன் மாதங்களில் இங்கிலாந்தில் நடைபெறும் 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில், பாகிஸ்தான் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு பி.சி.சி.ஐ. கடிதம் எழுத இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாளை நடைபெற இருக்கும்,  பி.சி.சி.ஐ. உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தானை விலக்கி வைக்க  தீர்மானம் நிறைற்றப்படும், அதைத்தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கடிதம் எழுதும் என்று கூறப்படுகிறது.

ஆனால், இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் கோரிக்கையை ஐசிசி ஏற்கும் என எதிர்பார்க்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக உலக நாடுகளிடம் ஒன்றிணைந்த கருத்து உருவாக்கப்பட்டு, பின்னர் ஐசிசி வருடாந்திர கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதன் பின்னரே பாகிஸ்தானை நீக்குவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து,  முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்நாள் பாகிஸ்தான் பிரதமருமான இம்ரான்கானின் புகைப்படம் , பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களும், நினைவுப் பரிசுகளும் பிசிசிஐ அலுவலகத்தில் இருந்து அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.