டி-20 உலகக்கோப்ப‍ைக்கான 9 மைதானங்களை பரிந்துரைத்த பிசிசிஐ!

மும்பை: இந்தாண்டின் பிற்பகுதியில், இந்தியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடருக்கான 9 மைதானங்களை, ஐசிசி அமைப்பிற்கு பரிந்துரை செய்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

சென்னை, பெங்களூரு, ஐதராபாத், அகமதாபாத், டெல்லி, தரம்சலா, கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகிய மைதானங்கள்தான் அவை. கடந்தவாரம் இறுதியில், ஆன்லைன் முறையில் நடைபெற்ற சந்திப்பில், இந்த மைதானங்கள் இறுதி செய்யப்பட்டன.

அதேசமயம், இதுதொடர்பான இறுதி முடிவு, கொரோனா பரவலின் தன்மையை வைத்தே மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்கின்றன. இந்தாண்டின், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இத்தொடர் நடைபெறுகிறது. நவம்பர் 13ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியாவில், கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் கடுமையாக இருப்பதால், ஐசிசி அமைப்பு தனது நிபுணர் குழுவை அனுப்பி வைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.