மும்பை: வயது மோசடியில் சிக்கி தண்டனைக்குள்ளாகும் கிரிக்கெட் வீரர்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் விதமாக, விதிமுறைகளை திருத்தியுள்ளது பிசிசிஐ அமைப்பு.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; முன்பு வயது தொடர்பான மோசடியில் சிக்கும் வீரர்களுக்கு, போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து தடை விதிக்கப்பட்டால், அவர்கள் 2 ஆண்டுகளுக்கு பிசிசிஐ நடத்தும் போட்டிகளில் பங்கேற்க முடியாது.

ஆனால், தற்போது திருத்தப்பட்டுள்ள புதிய விதிமுறையின்படி, வயது மோசடி காரணமாக தடையாணைப் பெற்ற வீரர்கள், ஓராண்டு மட்டுமே முழுமையான தடையில் இருந்து, இரண்டாவது ஆண்டில் கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மற்றும் போட்டித் தொடர்களில் பங்கேற்கலாம்.

இந்தப் புதிய விதிமுறை பிசிசிஐ அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. காஷ்மீரைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ரசிக் சலாம், வயது முறைகேட்டுப் புகாரில் சிக்கி, கடந்த ஜுன் மாதம் இரண்டு ஆண்டுகள் தடையாணைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு இந்தப் புதிய விதிமுறை சற்று ஆறுதலை அளிப்பதாக உள்ளது.